புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தேசிய செயற்பாட்டு மையம் விசேட அவதானம் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தேசிய செயற்பாட்டு மையம் விசேட அவதானம்

(எம்.மனோசித்ரா)

அண்மையில் இங்கிலாந்தில் இனங்காணப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை வைரஸ் இலங்கையின் சில பிரதேசங்களிலும் கடந்த வாரம் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் விஷேட அவதானம் செலுத்தியுள்ளது.

புதிய வகை உருமாறிய வைரஸ் பரவலுடன் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்ந்து வருவதோடு, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொதுச் சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் நாளை திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த இரு வாரங்களாக அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதன் காரணமாக அந்த தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கொவிட்-19 வைரஸின் புதிய வகை இலங்கையிலும் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அது இலங்கையில் பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் சில இடங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அதன் பரவல் பாரியளவில் இல்லை.

எனினும், முன்னைய வைரஸை விட இதற்கு வேகமாகப் பரவும் இயலுமை இருப்பதாக பல நாடுகள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை வைரஸ் உள்நாட்டில் உருவாவதற்கான வாய்ப்புள்ள போதும், வெளியில் இருந்தே வந்திருக்க முடியும் என கருதுவதாகவும் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், எதிர்பாராத விதமாக பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய வகை வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம, வவுனியா ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதால், அங்கு மாத்திரமே தொற்று இருப்பதாக அர்த்தப்படாது.

இந்த வைரஸ் தொடர்பான தேசிய வேலைத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது இனங்காணப்பட்டுள்ள வைரஸ் தவிர மேலும் பல வகையான வைரஸ்கள் நாட்டில் பரவியிருக்கின்றனவா, இல்லையா என்பதை தற்போதைக்கு கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad