(எம்.மனோசித்ரா)
சமூக வலைத்தளத்தினூடாக அறிவித்தல்களை விடுத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த 4 நைஜீரிய பிரஜைகள் உள்ளிட்ட 8 பேரடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சமூக வலைத்தளத்தினூடாக அறிவித்தலொன்று விடுக்கப்பட்டு 17 இலட்சத்து 45,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.
பரிசுப் பொதியொன்று கிடைக்கவுள்ளதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ள பணத்தை வைப்பிலிடுமாறும் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய முறைப்பாடளித்தவர்களால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த விசாரணைகளின் அடிப்படையில் வெவ்வேறு சிம் அட்டைகள் மற்றும் முகப்புத்தக கணக்குகளை பயன்படுத்தி வெவ்வேறு நபர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது அறிவித்தல்களை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று இயங்குவது தெரியவந்துள்ளது.
இந்த குழுவிலிருந்த நைஜீரிய பிரஜைகள் நால்வர் உள்ளிட்ட 8 பேர் களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த குழுவிலுள்ள நைஜீரிய பிரஜையொருவர் வசித்து வந்த கல்கிசையிலுள்ள வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டிலிருந்து மடிக்கணினி வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்துகின்ற 9 சிம் அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் 100 கடதாசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் களனி குற்ற விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்டவற்றினூடாக இவ்வாறான மோசடிகள் இடம்பெறக்கூடும். எனவே இவை தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment