(ஆர்.யசி)
திருகோணமலை எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை இலங்கையின் நிருவாகத்தின் கீழும் ஏனையவை இந்திய நிறுவனமொன்றின் நிருவாகத்தின் கீழும் இயங்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறினேனே தவிர இந்தியாவிடம் இருந்து எண்ணெய் குதங்களை இலங்கை அபகரிக்கும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெளிவுபடுத்தினார். எவ்வாறு இருப்பினும் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இலங்கை வசமாகும் என்பது உண்மை எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாய்மூல வினாக்கான விடை நேரத்தில், திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறியிருந்த நிலையில் அதனை அரசாங்கமே நிராகரித்துள்ளது, உங்களை பைத்தியக்காரன் என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்த உண்மைத்தன்மை என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியுமா என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் கம்மன்பில கூறுகையில், மனநல வைத்தியரின் கடமையை பிரதமர் செய்ய மாட்டார் என நான் நம்புகிறேன், அவ்வாறு மனநல வைத்தியராக பிரதமர் இருப்பார் என்றால் முதலில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்தே அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் 2003 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் எமது எண்ணெய்க்குதங்களை இந்தியாவிற்கு வழங்கினர். இப்போது நாம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை இலங்கையின் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உரிமத்தின் கீழ் நிருவகிக்கவும், ஏனையவற்றை இந்தியாவின் நிறுவனம் ஒன்றின் மூலமாக நிருவக்கிக்கும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.
இதுவும் கிழக்கு முனையம் போன்ற விடயமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் கிழக்கு முனையத்தில் முழுமையாக எமது நிருவாகத்தின் கீழிருந்த உரிமத்தில் 49 வீதத்தை இந்தியாவிற்கு கொடுப்பது. திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அவ்வாறு அல்ல, நூறு வீதம் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள குதங்களில் பெரும்பாலானவற்றை எமது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்வதே இங்கு இடம்பெறுகின்றது.
வெகு விரைவில் இந்தியாவின் எண்ணெய் குதங்கள் எம்வசமாகும் எனவும் பெரும்பாலான பகுதி எமக்கு ஏனையவை இந்தியாவிற்கும் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் அமையும் எனவும் நான் கூறியிருந்தேன். எனினும் ஒரு ஊடகம் அவர்களின் அவசர செய்தியில் தவறான மொழி பெயர்ப்புடன் செய்தியை பிரசுரித்துள்ளனர்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இலங்கை கைப்பற்றுவோம் என்ற அர்த்தத்தில் அவர்கள் செய்தியை பிரசுரித்தவுடன், அதே அர்த்தத்தில் இந்தியாவின் இரண்டு ஊடகங்களும் செய்தியை பிரசுரித்துள்ளன. அவர்களின் தலைப்பு செய்தியாக இவற்றை பிரசுரித்துள்ளதை அடுத்தே இந்திய உயர் ஸ்தானிகர் ஆலையம் அதற்கான மறுப்பு செய்தியை வெளியிட்டிருந்தனர்.
ஒன்றிணைந்து இதனை அபிவிருத்தி செய்வதாக சரியான செய்தியை தூதரகம் வெளியிட்டிருந்தது. எவ்வாறு இருப்பினும் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் வசமாகும் என்பது உண்மை, ஆனால் அது அபகரித்தல் என்ற வார்த்தை அல்ல, மாறாக பெரும்பாலான எண்ணெய் குதங்களை நாம் பெற்றுக் கொள்வோம் என்பது உண்மை எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment