இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணை - 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார் சுமந்திரன் - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணை - 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார் சுமந்திரன்

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பாக உறுப்பு நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

மெய்நிகர் ஊடாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 32 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்ததோடு மாற்றுக் கொள்கை நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சட்டத்தரணி பவானி பொன்சேகாவும் கலந்து கொண்டிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, சுமந்திரன், “இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்த போதும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் போதுமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஆகவே இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நீடித்துக் கொண்டிருப்பதன் காரணமாக எவ்விதமான நன்மைகளும் ஏற்பட்டுவிடப் பேவதில்லை. எனவே, இலங்கையின் பொறுப்புக்கூறலை நடைமுறைச்சாத்தியமாக்கும் வகையில் பொறிமுறையொன்று மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

தற்போதைய நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்த முடியும். ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக உள்ளன. பாதுகாப்புச் சபை ஊடாக இந்த விவகாரம் நகர்த்தப்பட வேண்டியிருப்பதால் அவ்வாறான சாத்தியப்பாடுகள் குறைவாக இருக்கின்றன.

இருப்பினும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கின்றன என்பதற்காக அதற்குரிய முயற்சிகளை கைவிடாது தொடர்ந்து முன்னெடுப்பட வேண்டியுள்ளது. இதற்கு சர்வதேச சமூகம் முழுமையான ஆதரவளிக்க வேண்டும். 

மேலும், பொறுப்புக்கூறல் விடயம் பெரிதாக எடுக்கப்பட்டாலும், இலங்கை தொடர்பில் இணை அனுசரணை நாடுகளால் உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணை வலுவானதாக அமைய வேண்டும். அதன் உள்ளடக்கங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை விடயம் நீட்சி பெறுவதை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்” என்றார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் ஜெனிவாவுக்கான பிரதிநிதிகள் தமக்குள் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad