ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் நிமல் லன்ஷா - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் நிமல் லன்ஷா

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அறிக்கையின் சாராம்சம் ஜனாதிபதியினால் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குக்கு வழங்கப்படும். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் முழுமைப்படுத்தும் என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா தெரிவித்தார்.

திவுலப்பிடிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைக்காக பயன்படுத்தியதால் நாட்டில் பாரிய விளைவுகள் 2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதிக்குள் இடம் பெற்றது. அரசாங்கத்தின் பலவீனத்தன்மையினை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை தடுக்க நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெளிவாக நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த மாதம் 31 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். விசாரணை அறிக்கை இவ்வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அறிக்கையின் சாராம்சம் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும். அரசியல் பழிவாங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்தரப்பினர் கோருகிறார்கள்.

இந்த அறிக்கையையும் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் அனைத்தும் பகிரங்கப்படுத்தப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் இதர காரணிகளை கருத்திற் கொண்டு ஒரு சில விடயங்களின் இரகசியத்தன்மை பேணப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad