இலங்கையின் பெயரை ஸ்ரீ லங்கா குடியரசு என மாற்ற வேண்டும் - நாட்டின் ஆட்சி முறைமை ஒற்றையாட்சி என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுதல் அவசியம் - முஸ்லிம் விவாக சட்டம் மாத்திரமல்ல அனைத்தும் நீக்கப்பட வேண்டும் - இரட்டை குடியுரிமைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் : உதய கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Sunday, February 14, 2021

இலங்கையின் பெயரை ஸ்ரீ லங்கா குடியரசு என மாற்ற வேண்டும் - நாட்டின் ஆட்சி முறைமை ஒற்றையாட்சி என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுதல் அவசியம் - முஸ்லிம் விவாக சட்டம் மாத்திரமல்ல அனைத்தும் நீக்கப்பட வேண்டும் - இரட்டை குடியுரிமைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் : உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச புதிய அரசியலமைப்பில் இலங்கையின் பெயர் ஸ்ரீ லங்கா குடியரசு என மாற்றப்பட வேண்டும். நாட்டின் ஆட்சி முறைமைய ஒற்றையாட்சி என்பதை அரசியமைப்பின் தமிழ் மொழி பிரதிகளிலும் மிக தெளிவாக குறிப்பிடுதல் அவசியமாகும். இல்லாவிடின் ஒரு தரப்பினர் சொற்பதங்களை கொண்டு வாதப் பிரதிவாதங்களை முன்வைப்பார்கள் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரும், சக்தி வலு அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன் முஸ்லிம் விவாக சட்டம் மாத்திரமல்ல தனிநபர் மற்றும் பிரதேச அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சட்டங்களும் இரத்து செய்யப்பட்டு ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற கொள்கைக்கு அனைத்து இன மக்களும் அடிபணியும் வகையிலான சூழல் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவிடம் பிவிதுறு ஹெல உருமய கட்சி முன்வைக்கும் யோசனைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 20 ஆவது திருததம் உருவாக்குதல் நாட்டுக்கு பொருந்தும் வகையிலான புதிய அரசியலமைப்பினை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டோம். 

தூர நோக்கு சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிட்ட சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை 2020 ஆம் ஆண்டு இடம்பெற்று முடிந்த பொதுத் தேர்தலின் தேர்தல் விஞ்ஞாபனமாக குறிப்பிட்டோம். 

அரசியலமைப்பு திருத்தம், புதிய அரசியலமைப்பு ஆகிய விடயங்களை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி பலமான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

பொதுத் தேர்தலின் வெற்றியை தொடர்ந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது. 

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் 9 பேரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது. உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை நிபுணர் குழுவினர் கோரியுள்ளார்கள். 

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கட்சி மட்டத்தில் எடுத்த சுயாதீன தீர்மானங்களை குழுவினரிடம் முன்வைக்க தீர்மானித்துள்ளனர். இதனடிப்படையில் பிவிதுறு ஹெல உருமய கட்சி பின்வரும் விடயங்களை நிபுணர் குழுவிடம் முன்வைக்கும்.

நாட்டின் பெயர் மாற்றம்
நாட்டின் தற்போதைய பெயர் இலங்கை. இப்பெயரை மாற்றியமைக்க வேண்டும். நாடுகளின் ஜனநாயம் பெயரை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த நாட்டின் ஜனநாயகத்தன்மை தீர்மானிக்கப்படுகிறது.

செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் குடியரசாக அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆகவே வரலாற்று பின்னணியை கொண்ட இலங்கையின் பெயரை புதிய அரசியலமைப்பின் ஊடாக ஸ்ரீ லங்கா குடியரசு என மாற்றியமைக்க வேண்டும்.

ஆட்சி முறைமை
இலங்கையின் ஆட்சி முறைமை ஒற்றையாட்சி தன்மையில் காணப்பட்டாலும் அதனை சமஷ்டியாட்சி முறைமையாக மாற்றியமைக்க பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பலரது முயற்சிகள் வெற்றிப் பெறவில்லை. இலங்கையின் ஆட்சி முறைமை ஒற்றையாட்சி தன்மை என்பதை புதிய அரசியமைப்பில் மிக தெளிவாகவும் உறுதியாகவும் குறிப்பிட வேண்டும்.

அரசியமைப்பின் தமிழ் மொழி பிரதியில் இலங்கை ஒற்றையாட்சி முறைமையினை கொண்ட நாடு என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆங்கில மொழியிலும் அவ்வாறான தன்மையே காணப்பட வேண்டும். சொற்பதற்களை கொண்டு இன்றும் ஒரு தரப்பினர் இலங்கை ஒற்றையாட்சி முறைமையினை கொண்ட நாடு அல்ல என்று வாதிட்டுக் கொள்கிறார்கள். ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அழிக்கும் பொறிமுறை புதிய அரசியமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.

பௌத்தம்- அரச மதம்
பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சியதிகாரத்தை முன்னெடுக்கும் நாடுகளை காட்டிலும் இலங்கையின் பௌத்த மதம் பழமையானதாக காணப்படுகிறது. 2600 வருடங்களுக்கும் மேற்பட்ட கால பின்னணியை இலங்கையின் பௌத்த மதம் கொண்டுள்ளது. ஆகவே பௌத்த மதத்தை பிரதான அரச மதமாக அங்கிகரித்து பிரகடனப்படுத்த வேண்டும்.

பௌத்த மதத்தை பாதுகாத்தல், வளர்ச்சி பெற செய்தல் ஆகியவற்றுக்கு அரசியமைப்பின் ஊடாக விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.செயற்படுத்தப்படும் விடயங்களை கண்காணிக்க விசேடநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை
அடிப்படைவாதிகளினாலும் சர்வதேச அச்சுறுத்தல்களினாலும் இலங்கைக்கு பல சவாகல்கள் ஏற்பட்டுள்ளன இதனை வரலாற்று சம்பவங்கள் ஊடாக அறிந்துக் கொள்ளலாம். இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற ரீதியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியமாகும.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூற வேண்டும். ஜனாதிபதியில் செயற்பாடுகளை பாராளுமன்ற குழு விசாரணைக்குட்படுத்தும் உரிமையை பாராளுமன்றத்துக்கு வழங்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றில் ஆறு மாத காலத்திற்கொருமுறை விவாதம் இடம்பெற வேண்டும்.

ஜனாதிபதியையும், பாராளுமன்றத்தையும் இணைக்கும் வகையில் ஜனாதிபதி தொடர்பான உப அமைச்சு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அவ்வமைச்சு பாராளுமன்றிற்கு முழுமையாக பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்க வேணடும். ஜனாதிபதி நீதிமன்றிற்கு கட்டுப்பட வேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு அமைய.

ஜனாதிபதி தேர்தல் முறைமை நீக்கம்
தேவையற்ற செலவினை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தேர்தல் முறைமை காணப்படுகிறது. ஜனாதிபதி பாராளுமன்றில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிரதம வேட்பாளரை அறிவிக்கும் வகையில் தங்களின் ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிக்க வேண்டும். பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி தாம் அறிவித்த ஜனாதிபதி வேட்பாளரை ஜனாதிபதியாக தெரிவு செய்து கொள்ளாம்.

ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவை
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் எத்தனை தடவை போட்டியிட முடியும் என்ற மட்டுப்பாடு காணப்படுகிறது. இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. யாரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும். அவர் எத்தனை முறை பதவி வகிக்க வேண்டும் என்பதை அரசியமைப்பு தீர்மானிக்க கூடாது. நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள தன்மையினை புதிய அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டும். ஆகவே ஒருவர் இரண்டு தடவை மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 19 ஆவது திருத்ததிலும், 20 ஆவது திருத்தத்திலும் காணப்படும் தடை புதிய அரசியமைப்பில் நீக்கப்பட வேண்டும்.

தேர்தல் முறைமை
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை பலவீனமானது. நாட்டுக்கும், அரசியல் தன்மைக்கும் பொறுத்தமற்ற தேர்தல் முறைமையே காணப்படுகிறது. நிலையான ஒரு அரசாங்கத்தை தோற்றுவிக்க நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை சாதகமாக அமையவில்லை.

1989 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 3 தடவை மாத்திரமே கிடைக்கப் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் நிலையான அரசாங்கத்தை ஒரு கட்சியால் அமைக்க முடிந்துள்ளது ஏனைய தேர்தல் முடிவுகள் அனைத்தும் முரண்பட்டதாக அமைந்துள்ளது.

மாவட்ட மட்டத்தில் உள்வாங்கப்படும் தெரிவு முறைமை நீக்கப்பட்டு தேசிய மட்டத்திலான தெரிவு முறைமை உள்வாங்கப்பட வேண்டும். புதிய அரசியமைப்பில் தேர்தல் முறைமை குறித்து அதிகளவில் கவனம் செலுத்துவது பிரதான கோரிக்கையாக உள்ளது.

ஒரு நாடு - ஒரு சட்டம்
முஸ்லிம் விவாக சட்டம் மாத்திரமல்ல, தற்போது நடைமுறையில் உள்ள கண்டி சிங்கள சட்டம், தேசவழமை சட்டம் என்று தனிநபர் மற்றும் பிரதேச அடிப்படையில் வேறுப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற கொள்கை பலப்படும் வகையில் தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களும் பொது சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். இவ்விடயத்தில் தேவையற்ற காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது. அனைத்து இன மக்களும் சட்டத்தின் முன் சமத்துவமாக மதிக்கப்பட வேண்டும்.

சட்டத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தல்
பாராளுமன்றத்தினால் இயற்றப்படும் சட்டத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தும் தன்மை தற்போது கிடையாது. இதனை பலவீனத்தன்மை என்று கருத வேண்டும். அரசியலமைப்பன் 13 ஆவது திருத்தம் நீதிமன்றத்தை தவிர்த்து பாராளுமன்ற குழு ஊடாக அரசியலமைப்பிற்கு முரணான வகையில உருவாக்கப்பட்டடிருந்தது. பாராளுமன்றத்தினால் உருவாக்கப்படும் சட்டத்தை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் நீதிமன்றிற்கு காணப்பட்டிருந்தால் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அன்று நிறைவேற்றப்பட்டிருக்காது.

பாராளுமன்றினால் உருவாக்கப்படும் சட்டத்தை பொதுமக்கள் 3 மாத காலத்திற்குள் நீதிமன்றின் ஊடாக சவாலுக்குட்படுத்தும் வாய்ப்பு பொதுமக்களுக்கு புதிய அரசியமைப்பின் ஊடாக வழங்கப்பட வேண்டும். இயற்றப்படும் சட்டம் குறித்து மக்களின் அபிப்ராயத்தை கோருவது அவசியமாகும்.

தேசிய வளங்கள்
தேசிய வளங்களை பிற நாட்டவருக்கு விற்கவோ, குத்தகை அடிப்படையில் வழங்கவோ 5 வருட காலத்துக்கு ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் அதிகாரம் கிடையாது. விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட தேசிய வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே 5 வருட ஆட்சிக்கு வருபவர்கள் தேசிய 99 வருட காலத்துக்கு தேசிய வளத்தை தாரைவார்ப்பது வேடிக்கையான செயற்பாடாகும்.

தேசிய வளங்கள் குறித்து அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை விசேட ஆதரவுடனானதாக காணப்பட வேண்டும். அரசியல்வாதிகளின் தேவைக்காக தேசிய வளங்கள் பாவிக்கப்படுவதை அரசியமைப்பின் ஊடாக தடை செய்ய வேண்டும்.

தேர்தல் கால வாக்குறுதி
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் கற்பனை மிக்க வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு வழங்குகிறது மக்களும் வாக்குறுதிகளுக்கு நம்பி குறித்த கட்சிக்கு ஆதரவு வழங்குகிறார்கள். பின்னர் வாக்குறுதிகளை அரசாங்கம் செய்படுத்துகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றியமைக்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் தலைமையில் விசேட சபை துறைசார் நிபுணர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட வேண்டும். வாக்குறுதிகள் அனைத்து அமைச்சுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு அவை செயற்படுத்தப்படுகிறதா என்று ஆராய்வது கட்டாயமாகும்.

இரட்டை குடியுரிமை விவகாரம்
இரட்டை குடியுரிமை கொண்டவர் அரச நிர்வாகத்தில் செயற்பட கூடாது என்பதை குறிப்பிட்டோம். மத்திய வங்கி பிணைமுறி விவகார மோசடியின் ஊடாக தகுந்த பாடத்தையும் கற்றுக் கொண்டோம். இரட்டை குடியுரிமையினை கொண்டவர் அரசியலில் ஈடுபட 20 ஆவJ திருத்தம் ஊடாகவும் தடை விதிக்க வேண்டும் என்று கட்சி அடிப்படையில் குறிப்பிட்டோம். ஆனால் எமது கருத்து வெற்றி பெறவில்லை.

இரட்டை குடியுரிமை விவகாரத்தில் புதிய அரசியமைப்பின் ஊடாக தீர்வு பெற்றுத்தருவதாக குறிப்பிடப்பட்டது. ஆகவே இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் எந்த நாட்டுக்கு விசுவாசியாக இருப்பார்கள் என்ற சந்தேகம் காணப்படுகிறது அரசியல், அரச திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் ஆகியவற்றுக்கு இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் இணைத்துக் கொள்ளக் கூடாது அதற்கு புதிய அரசியமைப்பின் ஊடான நிரந்தர தடை விதிக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை எமது யோசனையாக உத்தேச புதிய அரசியமைப்பின் குழுவினரிடம் முன்வைக்கவுள்ளோம். அரசியமைப்பு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் மாறுப்பட்ட பல யோசனைகளை முன்வைப்பார்கள். அனைவரது யோசனைகளும் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியமைப்பு சிறந்த முறையில் விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad