இறக்குமதி முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகியை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

இறக்குமதி முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகியை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

இறக்குமதி முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகியை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியன்மார் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ஆங் சான் சூகி மீது இறக்குமதி முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “தனது பதவிக் காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை வரும் 15ஆம் திகதி வரை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்திருக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறியதாக ஜனாதிபதி வின் மியின்ட் மீதும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் நெய்பிடாவில் உள்ள 75 வயதான ஆங் சான் சூகியின் வீட்டில் நடந்த தேடுதல் நடவடிக்கையில் ஆறு வோக்கி- டோக்கி ரேடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரேடியோக்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக நீதிமன்றத்தில் பொலிஸ் பதிவுசெய்துள்ளது. 

சாட்சிகளைக் கேள்வி கேட்பதற்கும், சாட்சியங்களைக் கோருவதற்கும், பிரதிவாதியைக் கேள்வி எழுப்பிய பின்னர் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும் புதன்கிழமை மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆவணம் சூகியின் தடுப்புக் காவலைக் கோரியது.

வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி வின் மைன்ட் மீது கடந்த நவம்பரில் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நெறிமுறைகளை மீறியதற்காக பொலிசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியவை என ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) மனித உரிமைகளுக்கான ஆசியான் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்துள்ளார்.

"இது அவர்களின் சட்டவிரோத அதிகாரப் பறிப்பை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கும் இராணுவ ஆட்சிக்குழுவின் அபத்தமான நடவடிக்கை" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment