இந்தியா அழுத்தம் பிரயோகிக்கின்றமை கவலைக்குரியது, ஜனாதிபதி தேசிய சபை ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

இந்தியா அழுத்தம் பிரயோகிக்கின்றமை கவலைக்குரியது, ஜனாதிபதி தேசிய சபை ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் சுயாதீனமாக எடுத்த தீர்மானத்துக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கின்றமை கவலைக்குரியது. தேசிய வளங்களை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி ஜனாதிபதி தேசிய சபையை ஸ்தாபிக்க வேண்டும். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அங்கம் வகிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் பாரிய போராட்டத்துக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாத்துள்ளோம். அரசாங்கத்துக்குள் எழுந்த போராட்டங்கள் வலுப்பெற்றதன் காரணமாகவே வெற்றி பெற முடிந்தது. தேசிய வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல அனைத்து இன மக்களுக்கும் உண்டு.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து தீர்மானம் எடுக்கும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தை மாற்றமின்றி செயற்படுத்துங்கள் என்று எவருக்கும் கூற முடியாது.

கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் சுயாதீனமான முறையில் எடுத்த தீர்மானத்துக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கின்றமை கவலைக்குரியது.

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளதார போட்டித்தன்மைக்கு இலங்கை பழியாக வேண்டிய தேவை கிடையாது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு ஆரம்ப காலத்திலிருந்தே காணப்படுகிறது.

தேசிய வளங்களை பாதுகாப்பதற்கு நிலையான கொள்கை வகுக்கப்பட வேண்டியது அவசியமாகும். அரசாங்கம் மாறும் போது தேசிய வளங்கள் தொடர்பான கொள்கைகளும் மாற்றமடைகின்றமை பலவீனமான தன்மையை ஏற்படுத்தும்.

நிலையான கொள்கை திட்டத்தை வகுக்க வேண்டுமாயின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து ஜனாதிபதி தேசிய சபை ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும். குறித்த தேசிய சபையில் எதிர்கட்சியும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் உள்வாங்கப்பட வேண்டும். நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் கூட்டமைப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடு இலங்கையே தவிர இந்தியா அல்ல என்றார்.

No comments:

Post a Comment