ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது - கூட்டத் தொடரில் பல தீர்க்கமான தீர்மானங்களை எடுப்போம் : அமைச்சர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 3, 2021

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது - கூட்டத் தொடரில் பல தீர்க்கமான தீர்மானங்களை எடுப்போம் : அமைச்சர் உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கை இரண்டு பிரதான காரணிகளை கொண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ள அறிக்கை விரைவில் வெளிவிவகார அமைச்சரினால் பகிரங்கப்படுத்தப்படும். இம்மாதம் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் பல தீர்க்கமான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கும் என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒருதலைபட்சமானது. ஆணையாளர் தனது பதவி அதிகாரத்தை மீறிய வகையில் பல விடயங்களை இலங்கைக்கு எதிராக தொடுத்துள்ளார். மனித உரிமை பேரவை வரையறைகளுக்குட்பட்டு செயற்பட வேண்டும்.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் உரிய ஆதாரங்கள் ஏதும் கிடையாது.

இவ்விரு காரணிகளையும் கொண்டு இலங்கை தொடர்பில் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் தயாரித்த அறிக்கையை வெளிவிகார அமைச்சர் வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவார்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை கொண்டுள்ளது.

இம்மாதம் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் தீர்க்கமான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கும். அனைத்து நாடுகளுடன் நட்புறவை பேண வேண்டும் என்ற காரணத்திற்காக இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை பழி கொடுத்து அரசாங்கம் கிழக்கு முனையத்தை பாதுகாத்துக் கொண்டதாக மாறுபட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகிறார்கள். மேற்கு முனையத்தை காட்டிலும் கிழக்கு முனையம் முக்கியமானது. ஆகவே கிழக்கு முனைய விவகாரத்தை கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்த நினைத்தவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment