ETI (எதிரிசிங்க நம்பிக்கை முதலீடு) நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்ட பல பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட அதன் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில், சுவர்ணமஹால் நகையகத்துடன் இணைந்த குறித்த நிதிநிறுவனத்தின் பணிப்பாளர்களில் நால்வரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, நேற்றையதினம் (05) ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா அஞ்சலி எதிரிசிங்க ஆகிய மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதில் 4ஆவது சந்தேகநபரான, நாலக எதிரிசிங்க இன்றையதினம் (06) CIDயில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த நால்வரும் இன்று (06) பிற்பகல் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நால்வரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் தலா ஒரு மில்லியன் ரூபா கொண்ட இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டதோடு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் CID யில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டது.
அத்துடன், குறித்த சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதவான், அவர்களது கடவுச்சீட்டுகளை இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment