தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் உடன்பாட்டு தீர்மானத்தை நீடிக்க அமைச்சரவை அங்கிகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 12, 2021

தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் உடன்பாட்டு தீர்மானத்தை நீடிக்க அமைச்சரவை அங்கிகாரம்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார்துறை ஊழியர்களுக்கு 14,500 ரூபா சம்பளம் வழங்கும் உடன்பாட்டு தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்க தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள, நெருக்கடி நிலைமையின் மத்தியில் தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற்சங்கங்கள், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி நிறுவப்பட்டுள்ள செயலணிக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதற்கமைய ஊழியர்களை தொழிலிருந்து நீக்காமல் இருத்தல், அனைத்து ஊழியர்களும் தொழிலில் ஈடுபடுவதற்கு சமமான வாய்ப்பு வழங்கல், ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிட்டால் இறுதியாக செலுத்தப்பட்ட மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50 சதவீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் பொருத்தமான தொகையை செலுத்தலும் குறித்த சம்பளத்திற்கு தொழில் வழங்குனர் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கும் பங்களிப்பு செய்தல் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றால் மக்களின் நாளாந்த செயற்பாடு மற்றும் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் சுற்றுலாத்துறை பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. குறித்த துறையின் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் கொவிட்-19 தொற்று நிலைமையால் பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தனியார் துறை ஊழியர்களை சேவையில் இருந்து நீக்காமல் அவர்களுக்கு 14,500 மாத சம்பளத்தை வழங்கும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்க தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment