(இராஜதுரை ஹஷான்)
அரச முறை கடன் செலுத்தலில் எவ்வித தடையும் ஏற்படாது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் நடைமுறையில் பல சவால்கள் காணப்படுகின்றன. அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு தேசிய பொருளதார வளர்ச்சியை 5.2 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என நிதி மற்றும் மூலதனச்சந்தை, அரச தொழில் முயற்சி சீர்த்திருத்தம் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய மட்டத்தில் பொருளாதாரத் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் இலங்கையும் 2020ம் ஆண்டு பொருளாதார மட்டத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி குறித்து எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் அரச முறை கடன்களை செலுத்துவதில் எவ்வித தடையும் ஏற்படாது. அரசாங்கம் 2020 ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து செலுத்த வேண்டிய கடன்களை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளது.
ஆகவே அரசமுறை கடன்களில் எவ்வித முரண்பாடும் ஏற்படாது. இலங்கை வங்கி, மக்கள் வங்கி உட்பட அரச வங்கிகளின் நிதி நிர்வாகத்தில் சிக்கல் நிலை காணப்படுகிறது. என்று குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது.
அரச வங்கிகளின் நிதி நிர்வாகம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் அச்சமில்லாமல் அரச வங்கிகளில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கலாம்.
2021ம் ஆண்டு தேசிய பொருளாதார முன்னேற்றத்தில் பல சவால்கள் காணப்படுகின்றன. அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு தேசிய பொருளாதார வளர்ச்சி 5.2 வீதத்தால் அதிகரிக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பல சவால்களை எதிர் கொண்டுள்ளோம். அனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வு கண்டு பொருளாதாரம் முன்னேற்றப்பட்டது.
கடந்த அரசாங்கத்திற்கு உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய சவால்கள் காணப்படவில்லை. இருப்பினும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
கடந்த அரசாங்கம் பொருளாதார கொள்கையில் செயற்படுத்திய தவறான திட்டங்கள் தற்போது திருத்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. என்றார்.
No comments:
Post a Comment