(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ஆயுர்வேத முறைமையில் சிகிச்சை வழங்கும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் முன்னெடுக்கப்படும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய மட்டத்தில் தயாரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைமைகளுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத வைத்திய முறைமை மேம்பாட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய மட்டத்தில் இதுவரையில் 37 மருத்துவ சிகிச்சை மற்றும் ஆயுர்வேத ஒளடதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 4 மருத்துவ முறைமைகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ஆயுர்வேத வைத்திய முறையில் சிகிச்சையளிக்கப்படும் நடவடிக்கை எதிர்வரும் வாரம் முன்னெடுக்கப்படும்.
ஆயுர்வேத திணைக்களத்தின் அனுமதி பெற்ற சிகிச்சை முறைமை மாத்திரம் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆயுர்வேத சிகிச்சை முறைமை மற்றும் ஆயுர்வேத பாணம் ஆகியவை தேசிய மட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இவை தற்போது விஞ்ஞான ஆய்வு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளளனவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி அவர்களுக்கு ஆயுர்வேத முறைமையில் சிகிச்சை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய வைத்திய முறை கட்டமைப்பை மீண்டும் தனித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
தேசிய நிதியை மோசடி செய்தவர்கள் பாரபட்சமின்றிய வகையில் தண்டிக்கப்படுவார்கள். கடந்த காலங்களில் இடம் பெற்ற மோசடிகள் தொடர்பில் உரிய சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விடயத்தை அரசாங்கம் பிரச்சாரமாக்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment