கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஈடாகவே, கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்க இந்தியா முன்வந்திருக்கிறது - பத்தரமுல்லே சீலரத்ன தேரர் - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஈடாகவே, கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்க இந்தியா முன்வந்திருக்கிறது - பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

(நா.தனுஜா)

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஈடாகவே, எமது நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்குவதற்கு இந்தியா முன்வந்திருக்கிறது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகள் பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் மோடியும் மக்களின் குரலுக்கு செவி சாய்த்து அந்த நிறுவனத்தைப் புறக்கணிப்பார். அத்தகைய ஒருவருக்கு எமது துறைமுகத்தின் 49 சதவீத உரிமையை ஏன் வழங்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது இந்த நாட்டின் சொத்துக்கள், துறைமுகங்கள் தொடர்பில் நாம் இப்போது கவலையடைந்திருக்கின்றோம். நாம் கடந்த காலத்திலும், தற்போதும் எமது தாய் நாட்டைப் பாதுக்கப்பட வேண்டும் என்றே தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம். நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு கடந்த அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

தற்போது எமது நாட்டிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இலவசமாக வழங்குவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது. இந்தத் தடுப்பு மருந்தை எமக்கு இலவசமாகப் பெற்றுத் தருவதற்கு என்ன காரணம்? ஏனைய நாடுகள் தடுப்பு மருந்தைப் பணம் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே அரசாங்கத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்குப் பதிலாகவே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எமக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. 

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமையில் 51 சதவீதம் இலங்கைக்கும் 49 சதவீதம் இந்தியாவிற்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். ஆனால் உண்மையில் அதுபோன்று 51 சதவீதம் எமது நாட்டிற்குக் கிடைக்காது. எனவே கிழக்கு முனையத்தின் நூறு சதவீத உரிமையையும் எம்வசமே இருக்க வேண்டும்.

இந்தியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகள் பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் மோடியும் மக்களின் குரலுக்கு செவி சாய்த்து அந்த நிறுவனத்தைப் புறக்கணிப்பார். அத்தகைய ஒருவருக்கு எமது துறைமுகத்தின் 49 சதவீத உரிமையை வழங்குவதன் ஊடாக, இங்கு பெரு நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்படும். 

அதன் விளைவாக இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போகும். இதன் விளைவுகள் இவ்வாறிருக்கையில், அரசாங்கத்தினால் ஏன் நாட்டின் வளங்களைப் பாதுகாக்க முடியாது? மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் விதமாக செயற்படுவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று அண்மைக் காலத்தில் சமூகவலைத்தளங்களின் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தொடர்பில் பல்வேறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். அவையனைத்தும் பொய்யான செய்திகளாகும். 

நான் இன்று சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். அவருக்கு எந்தவொரு வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை. அவர் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கின்றார் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment