அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதியினால் மற்றுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலும் இவ்வாணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயகலம் இதனை அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் உள்ளிட்ட மூவர் இவ்வாணைக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழு உறுப்பினர்கள்
தம்மிக பிரியந்த சமரகோன் ஜயவர்தன - உச்ச நீதிமன்ற நீதிபதி
திருமதி கெமா குமுதினி விக்ரமசிங்க - உச்ச நீதிமன்ற நீதிபதி
ரத்னசிறி குருசிங்க - மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி
கடந்த 2015 ஜனவரி 08 - 2019, நவம்பர் 16 திகதி வரையான காலப்பகுதி மற்றும் 2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2015 ஓகஸ்ட் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதவிகளை வகித்தவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் வகையில், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை, கடந்த வருடம் டிசம்பர் 08ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment