மத்தள விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்த இங்கிலாந்து அணி - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

மத்தள விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்த இங்கிலாந்து அணி

கொவிட்-19 இனால் கடந்த வருடம் தடைப்பட்ட இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மீண்டும் தொடரும் பொருட்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று இலங்கை வந்தடைந்தது.

பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமானம் மூலம் ஹம்பாந்தோட்டை, மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் உதவியாளர்களும் அங்கு வைத்து அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

காலியில் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளோம் என மத்தள விமான நிலையத்தில் வைத்து இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காலி சர்வதேச விளையாடரங்கில் நடைபெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட் ஜனவரி 14ஆம் திகதி ஆரம்பமாவதுடன் இரண்டாவதும் கடைசியுமான போட்டி ஜனவரி 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னர் ஹம்பாந்தோட்டையில் பயிற்சிகளில் ஈடுபடுவர்.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் அணியினர் பயிற்சிக்காக ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகின்றது.

இங்கிலாந்து அணியினர் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இம்மாதம் 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் இரண்டு நாள் பயிற்சி போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனை முன்னிட்டு 07 ஆம் திகதி பயிற்சிக்காக இங்கிலாந்து அணியினருக்கு ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஹம்பாந்தோட்டை மத்தளை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கை வந்த 44 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியினருக்கு ஹம்பாந்தோட்டை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்குமிட வசதி எற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கு இங்கிலாந்து விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது நெக்கட்டிவ் காட்டப்பட்டப்பட்டதாக சுகாதார துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இத்தோடு இன்று முதல் 04 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரையும் இங்கிலாந்து அணியினர் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad