(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் விமர்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவம் வெட்கப்பட வேண்டும். போலியான குற்றச்சாட்டுக்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது 7.3 சதவீதமாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 2.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது அது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வித கருத்தும் குறிப்பிடவில்லை.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் கிராமிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உள்நாட்டில் மேற்கொள்ளக் கூடிய உற்பத்திகளை உள்நாட்டில் ஊக்குவித்து முன்னெடுக்கும் செயற்பாடுகளை மக்கள் விடுதலை முன்னணி விமர்சித்து ஊடக அறிக்கைகளை வெளியிடுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவம் வெட்கப்பட வேண்டும் .
குறைந்த வருமானம் பெறும் 2 இலட்சம் குடும்பங்களைத் தெரிவு செய்து அக்குடும்பங்களிலுள்ள பெண்கள் சுயதொழில் செய்வதற்கு தேவையான உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதுடன் கிராமிய சந்தைகளில் 25000 புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும்.
தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த அரசாங்கத்தையும் அதற்கு ஆதரவாக செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியையும் நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் புறக்கணித்துள்ளார்கள். ஆகவே அரசாங்கத்தை பலவீனப்படுத்த முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்றார்.
No comments:
Post a Comment