(நா.தனுஜா)
உலகளாவிய சுகாதாரத் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உக்ரேன் 17 ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் இத்தகைய முக்கிய காரணிகளைப் புறக்கணித்துவிட்டு, ஆட்சியாளர்களின் குடும்பத்துக்கு நெருக்கமான தனிநபர் ஒருவரினால் ஏற்பாடு செய்யப்பட்டமையினால் உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சந்தித் சமரசிங்க குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இந்த சுற்றுலாப் பயணத்தை ஏற்பாடு செய்வதில் எந்த கம்பனிகள் தொடர்புபட்டிருக்கின்றன? அவற்றின் உரிமையாளர்கள் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்? இதற்கான அரசாங்கத்தினால் எந்தளவு நிதி செலவிடப்பட்டுள்ளது? என்பது போன்ற விடயங்களை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது உக்ரேன் சுற்றுலாப் பயணிகள் நாடு முழுவதும் அழைத்துச் செல்லப்படுகின்றமை மிகுந்த அவதானத்திற்குரியதாக மாறியிருக்கின்றது. உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதன் ஊடாக அரசாங்கம் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.
உலகளாவிய சுகாதாரத் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உக்ரேன் 17 ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் இவையனைத்தையும் புறக்கணித்துவிட்டு, ஆட்சியாளர் குடும்பத்துக்கு நெருக்கமான தனிநபர் ஒருவரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
நாட்டில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக அமுலிலுள்ள சூழ்நிலையில், புதிதாக நாட்டிற்குள் பிரவேசிப்போர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற நடைமுறையும் காணப்படுகின்றது. எனினும் உக்ரேனிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 5 நாட்கள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அதுமாத்திரமன்றி அவ்வாறு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுகாதாரப் பிரிவு என்பவற்றினால் முன்வைக்கப்பட்டிருந்த வழிகாட்டல்களைப் பின்பற்றாமலேயே இந்த சுற்றுலாப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை யால தேசிய பூங்காவிற்கு அழைத்துச் சென்ற ஜீப் வாகன சாரதிகள் 28 பேரை தனிமையிலிருக்குமாறு சுற்றுலாப் பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் நிர்ப்பந்தித்துள்ளனர்.
இந்த சாரதிகள் திஸ்ஸமகாராம பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் தயார்நிலையில் இருந்த சாரதிகளைப் போன்று இவர்கள் தயாராக இருக்கவில்லை.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் சுற்றுலாத் துறையும் அதனைச் சார்ந்த தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், தற்போது இந்த சுற்றுலாப் பயணத்தின் விளைவாக எவ்வித முன்னேற்றகரமான மாற்றங்களும் ஏற்பட்டுவிடவில்லை.
உக்ரேனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இந்த சுற்றுலாப் பயண ஏற்பாட்டில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். எனினும் இந்த சுற்றுலாப் பயணத்தை ஏற்பாடு செய்வதில் எந்த கம்பனிகள் தொடர்புபட்டிருக்கின்றன? அவற்றின் உரிமையாளர்கள் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டனர்? இதற்கான அரசாங்கத்தினால் எந்தளவு நிதி செலவிடப்பட்டுள்ளது? என்பது போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
ஆகவே இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் நன்கு கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று இந்த சுற்றுலாப் பயணத்தின் விளைவாக புதியதொரு கொரோனா வைரஸ் கொத்தணி ஏற்படுமாயின், அது ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment