(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் உள்ளக விவகாரத்தை சுதந்திர கட்சியின் தலைவர் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றமை பொருத்தமற்ற செயற்பாடாகும். பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்துள்ள எந்த கட்சிக்கும் இதுவரையில் அநீதி இழைக்கப்படவில்லை. அனைத்து தரப்பினரது கட்சி தனித்துவமும் பாதுகாக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்களுக்காக பயன்படுத்துவோம்.
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலமாக ஸ்தாபித்துள்ளார்கள். பொதுஜன பெரமுனவுடன் பிற கட்சிகள் ஒன்றினைந்துமையினால் இந்த வெற்றியை பெற முடிந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் உள்ளக அரசியல் குறித்து கருத்துரைத்தது இல்லை. ஏன் எதிர்க்கட்சியை கூட விமர்சித்தது இல்லை. உள்ளக அரசியலில் பல முரண்பாடுகள் காணப்படுவது இயல்பானதொரு விடயம்.
ஆனால் இதனை சர்வதே அரங்கிற்கு கொண்டு செல்லும் போது நாடு மலினப்படுத்தப்படும். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எக்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் உள்ளக விவகாரம் மற்றும் கருத்து முரண்பாடுகளை சுதந்திர கட்சியின் தலைவர் இந்நிய ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளமை இன்று அரசியல் களத்தில் பிரதான பேசு பொருளாக உள்ளது.
உள்ளக பிரச்சினையை சர்வதேச ஊடகங்களிடம் குறிப்பிட்டால் மாத்திரம் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது. கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை தவறாகும். இதனால் சர்வதேச மட்டத்தில் நாடு மலினப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்துள்ள எக்கட்சிக்கும் இதுவரையில் அநீதி இழைக்கப்படவில்லை. அனைத்து கட்சிகளின் தனித்துவமும் மதிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் யாரை பாராளுன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதை பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை. நாட்டு மக்களே அதனை தீர்மானித்தார்கள்.
ஆகவே கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணமுடியும. பொதுஜன பெரமுன கூட்டணியாகவே தொடர்ந்து பயணிக்கும்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. கடந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் வாக்கு கேட்க அஞ்சி தேர்தல் முறைமையில் திட்டமிட்டு சிக்கல் நிலையை ஏற்படுத்தியது.
தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்ற பிரச்சினை காணப்படுகிறது. அதற்கு பாராளுமன்றம் ஊடாகவே தீர்வை பெற முடியும் என்றார்.
No comments:
Post a Comment