நாட்டில் மென்மேலும் கொரோனா பரவச் செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன - சம்பிக்க ரணவக்க - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

நாட்டில் மென்மேலும் கொரோனா பரவச் செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன - சம்பிக்க ரணவக்க

(நா.தனுஜா)

இலங்கையை விட வறிய நாடான உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து எமது நாட்டின் சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்த முயற்சிப்பதாகக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது உலகின் பல்வேறு நாடுகள் தமது மக்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றி செயற்பட்டு வருகின்றன. இஸ்ரேல் அந்நாட்டு சனத் தொகையில் 10 சதவீதமானோருக்கு தடுப்பு மருந்தை வழங்கி விட்டது. 

அதேபோன்று இந்தியாவும் இரண்டு தடுப்பு மருந்துகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டிருப்பதுடன் அவற்றை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் எமது நாட்டில் மென்மேலும் கொரோனா வைரஸை பரவச் செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில் கொவிட்-19 தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொள்வதற்கான முறையான நடவடிக்கைகள் எவையும் இதுவரையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அதனூடாக தமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது என்பது குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது. 

அண்மைக் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களின் வேதனைக் குரலே எமக்கு அதிகம் கேட்கின்றது. அவர்கள் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டு, தங்குவதற்கான விடுதிகளின் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளன. அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கத்தினால் முறையான செயற்திட்டங்கள் எவையும் வகுக்கப்படவில்லை.

ஆனால் ராஜபக்ஷ குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவரான உதயங்க வீரதுங்க உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். உக்ரேனின் தலா வருமானம் இலங்கையின் தலா வருமானத்தை விடவும் குறைவாகும். உக்ரேன் என்பது இலங்கையை விடவும் வறிய நாடு என்பதுடன், கடந்த காலங்களில் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது.

அத்தகைய நாடொன்றிலிருந்து சுற்றுலாப் பயணிகளை வர வழைத்து, எமது நாட்டின் சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்த முயற்சிப்பதென்பது மிகவும் நகைப்பிற்குரிய விடயமாகும்.

அதுமாத்திரமன்றி, அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உக்ரேனுடன் தொடர்புடைய வகையில் இடம்பெற்ற மிக் விமானக் கொள்வனவு மோசடிக்குப் பதில் கூற வேண்டியவர்களின் ஒருவரே உதயங்க வீரதுங்க ஆவார். 

அவ்வாறிருக்கையில் அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad