நாளாந்தம் ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய நிலை ஏற்படும், எதிர்காலத்தில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் - எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 30, 2021

நாளாந்தம் ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய நிலை ஏற்படும், எதிர்காலத்தில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் - எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் 750 வரையில் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவல் வழிமுறைகளை முறையாக மதிப்பீடு செய்யாவிட்டால் எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய நிலைமையும் ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்காலத்தில் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதோடு, குறிப்பாக மேல் மாகாணத்திற்கு வெளியில் மரணங்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

கண்டி, இரத்தினபுரி, குருணாகல் ஆகிய சில மாவட்டங்களில் நாளொன்றுக்கு 50 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை காணப்படுகிறது. அநுராதபுரத்தில் இராணுவ முகாம்கள் அல்லது இராணுவ பயிற்சி முகாம்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் சுதந்திர தின கொண்ட்டாங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்பதால் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

வைத்தியசாலைகளிலிருந்து வீட்டுக்கு அனுப்புவது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் மதிப்பீடு செய்து அதற்கான வழிகாட்டல்களை வெளியிட்டதன் காரணமாகவே நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோரை குணப்படுத்தி வீடுகளுக்கு அனுப்ப முடிந்துள்ளது.

இதே போன்று நாளாந்தம் பதிவாகின்ற மரணங்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் சராசரியாக 3 - 4 க்கு இடையிலேயே காணப்பட்டது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 7 - 8 மரணங்கள் பதிவாகின்றன. இது எதிர்காலத்தில் முகங்கொடுக்கப் போகும் ஏதேனும் அபாய நிலைக்கான எச்சரிக்கையா என்பதை ஆழமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலேயே நூற்றுக்கு 90 வீதமான மரணங்கள் பதிவாகின. ஆனால் வெள்ளியன்று பதிவான 8 மரணங்களில் அனைத்தும் கொழும்பு மாநகர சபைக்கு வெளியிலேயே பதிவாகியுள்ளன. 8 இல் 5 மரணங்கள் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியில் பதிவாகியுள்ளன. 8 இல் 3 மரணங்கள் மேல் மாகாணத்திற்கு வெளியில் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணத்தில் அபாய நிலை நூற்றுக்கு 50 சதவீதம் குறைவடைந்து ஏனைய பகுதிகள் அதிகரித்துள்ளதைப் போலவே, மரணங்களின் எண்ணிக்கையிலும் நிகழ்கின்றது. 

எதிர்காலத்தில் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதோடு, மேல் மாகாணத்திற்கு வெளியில் மரணங்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment