அனைத்து குடிமக்களையும் இனம், மதம், சாதி அடிப்படையில் எந்த பாகுபாடுமின்றி நடத்தும் ஒரு தலைமை இன்று நாட்டில் உள்ளது - அமைச்சர் இந்திக அனுருத்த - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

அனைத்து குடிமக்களையும் இனம், மதம், சாதி அடிப்படையில் எந்த பாகுபாடுமின்றி நடத்தும் ஒரு தலைமை இன்று நாட்டில் உள்ளது - அமைச்சர் இந்திக அனுருத்த

முனீறா அபூபக்கர்

நாட்டில் தேவையற்ற அச்சத்தை உருவாக்க பொய்யான வதந்திகளை இட்டுக்கட்டும் கடும்போக்காளர்களின் தவறான பிரச்சாரத்திற்கு மக்கள் பலியாக வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்வதோடு, அவர்கள் அப்படி செய்வது தங்கள் வாழ்வாதாரத்துக்காகவே என்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து குடிமக்களையும் இனம், மதம், சாதி ஆகிய அடிப்படையில் எந்த பாகுபாடுமின்றி நடத்தும் ஒரு தலைமை இன்று நாட்டில் உள்ளது என்று கூறிய அமைச்சர், அனைத்து குடிமக்கள் மற்றும் பிறந்த, பிறக்காத அனைத்து குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உழைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க மக்களை சுட்டிக்காட்டி அரசியல் நோக்கங்கள் எட்டப்பட்டுள்ளன என்றும் ஆனால் அது எந்த மதத்திற்கும் பயனளிக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் கட்டப்பட்ட 3 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் இன்று (10) கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரன, காலி மாவட்ட மேயர் பிரியந்த கொடகம சஹபந்து உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

போப்பே பிரதேச செயலகப் பிரிவில் மூலன கிழக்கு, கடவத்சதர பிரதேச செயலகப் பிரிவில் கடுகொட மற்றும் தடல்ல மேற்கு ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் திறக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவிறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த வேலைத் திட்டம் நாட்டில் உள்ள 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad