நிரந்தரமாக முடக்கப்பட்டது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் கணக்கு - பதவியை பறிக்க ஜனநாயக கட்சி தீவிரம் - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

நிரந்தரமாக முடக்கப்பட்டது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ட்விட்டர் கணக்கு - பதவியை பறிக்க ஜனநாயக கட்சி தீவிரம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து உள்ளதால்" அவர் ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக முடக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டிரம்பின் கணக்கிலிருந்து (@realDonaldTrump) பதிவிடப்பட்ட சமீபத்திய ட்வீட்டுகள் மற்றும் அதையொட்டி உள்ள சூழ்நிலையையும் தீவிர மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறுகிறது.

டிரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமெரிக்க நாடளுமன்றத்தின் மீது ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து அவரது ட்விட்டர் கணக்கு 12 மணி நேரத்திற்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

டிரம்ப் மீண்டும் தங்களது சமூக ஊடகத்தின் விதிமுறைகளை மீறினால், அவர் "நிரந்தரமாக" தடை செய்யப்படுவார் என்று அப்போது ட்விட்டர் எச்சரித்திருந்தது.

தற்போது டிரம்பின் ட்விட்டர் கணக்குக்கு விதிக்கப்பட்டுள்ள நிரந்தர தடை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது தேர்தல் பிரசார ஆலோசகரான ஜேசன் மில்லர், "இது அருவருப்பானது. அவர்கள் அடுத்து உங்களை நோக்கி வருகிறார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால், நீங்கள் தவறு செய்கிறீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற வளாகமான கேப்பிட்டலை சூறையாடியவர்களை "தேசபக்தர்கள்" என்று குறிப்பிட்டு பல ட்விட்டர் பதிவுகளை டிரம்ப் வெளியிட்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய ஜனாதிபதியாகவிருக்கும் ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த டிரம்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தை கலவர பூமியாக மாற்றிய சம்பவத்தில் இதுவரை நான்கு பொதுமக்களும், ஒரு காவல்துறை அதிகாரியும் உயிரிழந்துள்ளனர்.

"நாங்கள் ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டோம், நாங்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம்" என்று தேர்தல் குறித்து டிரம்ப் தனது ஆதாரவாளர்களுக்கு உரையாற்றிய பிறகே இந்த கலவரம் வெடித்தது.

இதைத் தொடர்ந்து, டிரம்பின் ஃபேஸ்புக் கணக்கை "காலவரையறையின்றி" முடக்குவதாக வியாழக்கிழமையன்று அந்த நிறுவனம் அறிவித்தது. இதேபோன்ற முடிவை ட்விட்ச், ஸ்னாப்சாட் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களும் எடுத்திருந்தன.

என்ன சொல்கிறது ட்விட்டர் நிறுவனம்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ட்விட்டர் நிறுவனம், "இந்த வாரம் நடந்த கொடூரமான சம்பவங்களை அடுத்து, ட்விட்டரின் விதிமுறைகளை தொடர்ந்து மீறுவது இதுபோன்ற முடிவுக்கு இட்டுச் செல்லும் என்று நாங்கள் கடந்த புதன்கிழமையே தெளிவாக கூறியிருந்தோம்" என்று தெரிவித்துள்ளது.

"தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உலகத் தலைவர்களிடமிருந்து பொதுமக்கள் நேரடியாக தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே ட்விட்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த கணக்குகள் யாவும் ட்விட்டர் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல என்றும், ட்விட்டரை வன்முறையை தூண்டுவதற்கு பயன்படுத்த கூடாது என்பதையும் தொடர்ந்து தெளிவுபடுத்தி வந்துள்ளோம். மேலும், எங்கள் கொள்கைகள் மற்றும் அவற்றை அமுல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து வெளிப்படையாக இருப்போம்" என்று ட்விட்டர் மேலும் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, டிரம்பின் விசுவாசிகளான முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் மற்றும் வழக்கறிஞர் சிட்னி பவல் ஆகியோரின் கணக்குகளை ட்விட்டர் நிரந்தரமாக தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்பிடல் கலவரத்தை அடுத்து ட்விட்டரில் டிரம்பை தடை செய்யுமாறு கோரி 350 ட்விட்டர் ஊழியர்கள் இந்த வாரம் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சிக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கு வகித்ததற்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க குற்றச்சாட்டை வரும் திங்கட்கிழமையன்று முன்வைக்க ஜனநாயக கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

டிரம்ப் உடனடியாக பதவி விலகவில்லை என்றால் அவர் மீது பதவி நீக்க நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad