ஏறாவூர் நகர சபையின் மீண்டெழும் செலவுகளுக்கு மாத்திரம் அனுமதி - முடிவெடுக்கும் தரப்பாக கிழக்கு மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 3, 2021

ஏறாவூர் நகர சபையின் மீண்டெழும் செலவுகளுக்கு மாத்திரம் அனுமதி - முடிவெடுக்கும் தரப்பாக கிழக்கு மாகாண ஆளுநர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு விவகாரம் தொடர்ந்தும் குழப்பகரமான நிலையில் இருந்து வரும் நிலையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடமிருந்து நகர சபைச் செயலாளருக்கு புதிய உத்தரவு வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் 2021 இவ்வாண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவுகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சபைச் செயலாளர் எம்.ஆர். ஷியாவுல் ஹக் தெரிவித்தார்.

இது தவிர எந்த விதமான மூலதனச் செலவுகளையும் மேற்கொள்ளாதிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மீண்டெழும் செலவுகள் எனக் கருதுமிடத்து நாளாந்த பராமரிப்பு வேலைகள் ஊழியர்களின் சம்பளம் மின்சாரக் கொடுப்பனவுகள், அலுவலக சிறிய பராமரிப்பு வசதிகள், வாகனங்களின் சிறிய பராமரிப்புக்கள் உள்ளிட்டவை அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் பாரிய செலவுகளைக் கொண்டதான வாகனங்களுக்கு உதிரிப்பாகங்கள் மாற்றுதல் கட்டிடங்கள் நிருமாணித்தல் உள்ளிட்ட மூலதனச் செலவுகளை உள்ளடக்கிய விடயங்கள் நகர சபையால் செயற்படுத்த முடியாது என தெரிய வருகின்றது.

ஏறாவூர் நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான 2 ஆவது வரவு செலவுத் திட்டமும் திருத்தங்களுடன் கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் சபை அமர்வு கூச்சல் குழப்பத்தில் முடிவடைந்தது.

இதற்கு முன்னரும் இந்த வரவு செலவுத் திட்டம் கடந்த ஒக்ரோபெர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருத்தங்களுடான மறு வரவு செலவுத் திட்டமும் குழப்பத்தில் முடிவடைந்துள்ளதனால் நகர சபை திண்டாடி வருகின்றது.

இனி இவ்விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுநரே முடிவெடுக்கும் தரப்பாக மாறியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment