கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய மற்றொரு கைதி சிக்கினார் - அடைக்கலம் கொடுத்தவரும் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய மற்றொரு கைதி சிக்கினார் - அடைக்கலம் கொடுத்தவரும் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலன்னறுவை - கல்லேல்ல கொவிட்-19 சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற தொற்றாளர்களான கைதிகளில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரச்சிக்கட்டு - ஆணைவிழுந்தான் பகுதியில் வைத்து 52 வயதான நிமல் வசந்த எனும் சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஆரச்சிகட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். 

இந்நிலையில், தப்பி வந்த கொவிட் தொற்றுக்குள்ளான கைதிக்கு தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொருவரும் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

பொலன்னறுவை - கல்லேல்ல கொவிட்-19 சிகிச்சை நிலையத்திலிருந்து 5 கைதிகள் கடந்த 2019 டிசம்பர் 31 ஆம் திகதி அதிகாலை தப்பிச் சென்றிருந்தனர். 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஐவரும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

31 வயதான புத்திக விமலரத்ன, 27 வயதான கவிந்து மதுஷங்க, 26 வயதான கெலும் அப்புஹாமி, 52 வயதான நிமல் வசந்த மற்றும் 36 வயதான சுமித் புஷ்பகுமார ஆகிய கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். 

இவர்களில் புத்திக விமலரத்ன என்பவர் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டிலும், கெலும் அப்புஹாமி திருட்டு சம்பவம் தொடர்பிலும், நிமல் வசந்த கொள்ளை தொடர்பிலும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஏனைய இருவரும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் இருந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 0718 591233 என்ற இலக்கத்தினூடாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

No comments:

Post a Comment