"பலாலி' விமான நிலையத்தை அரசாங்கம் சர்வதேச விமான நிலையமாக ஏற்றுக் கொள்ளவில்லையா - தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிக்க முடிகின்றதா? : கேள்வி எழுப்பினார் சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

"பலாலி' விமான நிலையத்தை அரசாங்கம் சர்வதேச விமான நிலையமாக ஏற்றுக் கொள்ளவில்லையா - தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிக்க முடிகின்றதா? : கேள்வி எழுப்பினார் சாணக்கியன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யாழ்ப்பாணம் "பலாலி' விமான நிலையத்தை அரசாங்கம் சர்வதேச விமான நிலையமாக ஏற்றுக்கொள்ளவில்லையா, ஏன் துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் விமான நிலையம் உள்வாங்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி சட்டத்தின் கீழான கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழ் மத்தள விமான நிலையம் மற்றும் கொழும்பு விமான நிலையம் உள்வாங்கப்பட்டுள்ளது, ஏன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இதில் உள்ளடங்கவில்லை என்பதை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அரசாங்கம் சர்வதேச விமான நிலையமாக கருதவில்லையா? இதற்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும். 

அதேபோல் தொழிநுட்ப கல்வி முறையைமை நாட்டில் மேம்படுத்துவதில் அரசாங்கங்கள் தோல்வி கண்டுள்ளன. 2003 ஆம் ஆண்டில் இருந்து தொழிநுட்ப திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுகின்றது, எங்கே அந்தப்பணம், நாட்டில் "வை-பை" வசதிகள் கூட இன்னமும் முழுமை பெறவில்லை, அதற்காக ஒதுக்கிய மில்லியன் கணக்கான நிதிக்கு என்னவானது, தொழிநுட்பத்துறை பற்றி பேசும்போது தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவே நினைவிற்கு வரும்.

கடந்த ஆட்சியிலும் அப்போதைய ஜனாதிபதி தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுவிற்கு தனது சகோதரர் ஒருவரை நியமித்தார், தற்போதைய ஜனாதிபதி புதிதாக தொழிநுட்ப அமைச்சு ஒன்றினை உருவாக்கி அதில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை இணைத்துள்ளார்.

ஆனால் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, அனைவரும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் மீது ஏன் அளவுக்கு அதிகமான கவனம் செலுத்துகின்றீர்கள், அதில் அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிக்க முடிகின்றதா? மக்களும் சற்று இது குறித்து தேடிப்பாருங்கள்.

அதேபோல் மட்டக்களப்பில் சஞ்சீவன் என்ற சிறுவன் நீர் கீழ் தகவல்களை தேடும் பொறிமுறை ஒன்றினை உருவாக்கியுள்ளார். இவ்வாறான ஒன்றை ஏன் பதிவுசெய்து அவர்களை ஊக்குவிக்கக்கூடாதா? கொரோனா பாணி கண்டுபிடிப்பவர்களையா அங்கீகரிப்பீர்கள். பொய்யான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திறமைசாலிகளை மறைக்க வேண்டாம். 

அதேபோல் ஒரு லட்சம் வேலைகளை புதிதாக அரசாங்கம் கொடுப்பதாக கூறினர், ஆனால் இன்றுவரை அவ்வாறான ஒன்றும் நடக்கவில்லை, இவை வெறுமனே அரசியல் நாடகமாகவே காணப்படுகின்றது. 

பட்டதாரி இளைஞர்கள் இன்னமும் எந்தவொரு வேலை இல்லாது உள்ளனர். வேலை தருவதாக கூறுகின்ற போதிலும் கஷ்டப்பட்ட மக்களுக்கு அவை சென்றடையவில்லை. பணக்காரார்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றது. எனவே இவ்வாறான அரசாங்கம் மோசமான அரசியல் நிகழ்ச்சி நிரலில் பொதுமக்களை நிராகரிக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment