கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் கடந்த அரசாங்கம் செயற்பட்ட வகையில் செயற்பட்டால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் புறக்கணிப்பார்கள் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
எம்பிலிபிடிய பகுதியில் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பொருளாதாரத்தின் கேந்திர மையம் மாத்தரமல்ல தேசிய பாதுகாப்பிற்கும் பிரதான தளமாகவும் உள்ளது. அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்டுத்தும் வகையில் செயற்படுகிறது.
துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிற நாட்டு நிறுவனங்களுக்கு விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ மாட்டோம் என அரச தலைவர்கள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் பொய்யாகும். கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு எவ்வாறு இரகசியமாக வழங்கியதோ அதன் தன்மையினையே தற்போதைய அரசாங்கமும் தொடர்கிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் விடயம் குறித்து ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் மாத்திரம் சாதகமாக கருத்துரைக்கிறார்கள். தொழிற்சங்கத்தினர், துறைசார் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த எதிர்ப்புக்களை அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பாக அரசாங்கம் மாற்றியமைக்கக்கூடாது. ஆகவே அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
பொதுஜன பெரமுன தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன. பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் கடந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்ட விளைவே தற்போதைய அரசாங்கத்திற்கும் ஏற்படும். ஆகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment