(எம்.மனோசித்ரா)
சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏதேனுமொரு நாட்டில் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இலங்கைக்கான சுற்றுலா பிரயாணத்தை மேற்கொள்ளும் போது 3 தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுவது அத்தியாவசியமானதாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இம்மாதம் 21 ஆம் திகதி முதல் சுற்றுலாத்துறை ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட போது இதனைக்கூறிய அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது பதிவு செய்யப்பட்ட 180 முதல் தர ஹோட்டல்கள் உள்ளன. இவற்றில் 53 ஹோட்டல்கள் சுற்றுலாப் பிரயாணிகளை தங்க வைப்பதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளன.
இவற்றுக்கூடான சேவையின் மூலம் சர்வதேசத்தின் மத்தியில் தெளிவுபடுத்தலொன்றை வழங்கக் கூடியதாகவிருக்கும். அத்தோடு இந்த ஹோட்டல்களுக்கு இலங்கையர்களுக்குச் செல்ல முடியாது.
பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் அதன் முடிவுகளை பெற்றுக் கொள்ள முடியும். அதுவரையில் ஒவ்வொருவரும் அவரவர் அறைகளிலேயே தங்கியிருக்க வேண்டும். இவை சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய துறையினருடன் முன்னெடுக்கப்பட்ட பல சுற்று கலந்துரையாடல்களில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தை வந்தடையும் போதும், நாட்டுக்கு வந்து 5 - 6 நாட்களுக்கிடையிலும், பின்னர் 10 - 14 நாட்களுக்கிடையிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். இரண்டாம் பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்படவில்லை என்றால் மூன்றாம் பரிசோதனை விரும்பினால் செய்யக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலாத் துறைக்கான ஏற்பாடுகள் ஒருங்கிணைப்புக்களை மாத்திரமே நாம் முன்னெடுக்கின்றோம். கண்காணிப்பு நடவடிக்கைகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவேதான் அண்மையில் உக்ரேன் பிரயாணிகளால் யாலவில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
வெளிநாடுகளிலுள்ளவர்கள் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இலங்கையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுவது அத்தியாவசியமானதாகும். காரணம் தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்த வித அறிவிப்புக்களும் அல்லது விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டமை தொடர்பிலும் அறிவிக்கப்படாமையுமாகும் என்றார்.
No comments:
Post a Comment