மாவனல்லை புத்தர் சிலை கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 5, 2021

மாவனல்லை புத்தர் சிலை கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் கைது

கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி இரவு, மாவனல்லை பொலிஸ் பிரிவில் உள்ள ஹிங்குல பகுதியில், கொழும்பு - கண்டி வீதிக்கு அருகில் காணப்படும் புத்தர் சிலையின் வெளிப்புற கண்ணாடி உடைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவமொன்று இடம் பெற்றிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில், மாவனல்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதனுடன் இணைந்தவாறு கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் (SSP) அறிவுறுத்தலின் பேரில் கேகாலை பிரதேச புலனாய்வு பிரிவு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். Buddha Statue, Statue Damaged, Arrest, Arrested, Mawanella, Statue, Kegalle

கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பிரியந்த சம்பத் குமார (30) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அஜித் ரோஹண, சந்தேகநபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த தினம், நண்பகல் வேளையில் சிகிச்சை பெற பேராதெனிய மருத்துவமனைக்குச் சென்று இரவு வேளையில் கேகாலை திரும்பியதாகக் கூறப்படுகிறது.

குறித்த சந்தேகநபர், கடந்த காலங்களிலும் சில வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் காணப்பட்ட உண்டியல்களை உடைத்து பணம் திருடியமை தொடர்பான சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படும் நிலையில் அச்சம்பவங்கள் குறித்தும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபர் வந்த பஸ் மற்றும் சந்தேகநபர் கேகாலைக்கு திரும்பிய பஸ் குறித்து கேகாலை பிரிவுக்கான குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சில இனவாதத்தை தூண்டும் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்திருந்தன, குறிப்பாக சமூக ஊடகங்களில் இது ஒரு தீவிரவாத அல்லது பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் எந்தவிதமான பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகளுடனும் தொடர்பான ஒன்று அல்ல என்றும், போதைக்கு அடிமையான சந்தேகநபர் மேற்கொண்ட செயல் இது என்பதும் தெரிய வந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்தின்படி, புத்தர் சிலையிலிருந்து ரூபா. 60 பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், CCTV காட்சிகள் மற்றும் ஏனைய சூழ்நிலை ஆதாரங்களைப் பயன்படுத்தி கேகாலை பிரிவுக்கான குற்றப் புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

மாவனல்லை பிரதேசத்தில் உள்ள கல் குவாரி ஒன்றில் வெடி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இவ்வாறான கருத்தையே ஒரு சில ஊடகங்கள் பரப்பிய நிலையில் குறித்த வெடி பொருட்கள் பேராதெனிய பகுதியில் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய துஷான் பின்னகொல்ல (49), சுகத் வீரசிங்க (36), சுகத் கிம்ஹான (21), சரத் பண்டார ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad