விஞ்ஞான ஆய்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல், கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது - விசேட வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

விஞ்ஞான ஆய்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல், கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது - விசேட வைத்திய நிபுணர் ஜீ. வீரசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தவறி இருக்கின்றது. அத்துடன் இதனை கட்டுப்படுத்த விஞ்ஞான ஆய்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல், கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது என இலங்கை கம்யூனிஸ் கட்சியின் செயலாளரும், வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான ஜீ. வீரசிங்க தெரிவித்தார்.

கொவிட்டை கட்டுப்படுத்த தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் தேவை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. என்றாலும் அந்த நடவடிக்கை தேசிய மட்டத்திலான நடவடிக்கையாக காண்பதற்கு இல்லை. தேசிய மட்டத்திலான வேலைத்திட்டம் ஒன்று இருந்தால்தான் அனைவரதும் ஒத்துழைப்பை இதற்கு பெற்றுக் கொள்ளலாம். குறைந்த பட்சம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசிய கட்சிகளை இதற்காக இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற்றிருப்பதை காணமுடியாமல் இருக்கின்றது. 

அதேபோன்று அனைத்து சமூகத்தவர்களையும் இந்த வேலைத்திட்டத்துக்கு இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகும். 

அத்துடன் பிரசாரப்படுத்திய பாணியை பயன்படுத்தியவர்களுக்கும் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் எமது நாடு பேரழிவுக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கின்றது.

மேலும், கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால், அந்த சடலங்களின் பாகங்கள் நீருடன் கலந்து, அந்த நீரை யாராவது பயன்படுத்தினால் கொரோனா தொற்று ஏற்படும் என்பது கற்பனையான நிலைப்பாடாகும். அவ்வாறு ஒருபோதும் ஏற்படுவதில்லை. விஞ்ஞான ஆய்வு ரீதியில் அது பிழையான கருத்தாகும். 

இந்த பிரச்சினையால் நாட்டில் மிகவும் உணர்வு ரீதியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அடக்கம் செய்ய அனுமதிக்காததால் நாட்டில் ஒரு சமூகம் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. 

அதனால் முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரமல்ல கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும், அதற்கான அனுமதியை வழங்கி, அது தொடர்பான தேவையான சுகாதார வழிகாட்டல்களை தயாரிக்க வேண்டியது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad