அனைத்து இன மக்கள், கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக்க வேண்டும் - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Friday, January 29, 2021

அனைத்து இன மக்கள், கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக்க வேண்டும் - லக்ஷ்மன் கிரியெல்ல

(எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய அரசியலமைப்புக்கு அனைத்து இன மக்களது மற்றும் கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக அமைக்க வேண்டும். அரசாங்கம் அவ்வாறு செயற்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்கு சம்பந்தப்படும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பு தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக அரசாங்கத்தினால் புதிய குழுவொன்றை நியமித்திருக்கின்றது. குறித்த குழுவுக்கு மக்களின் கருத்துக்களை வழங்க முடியும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளையும் வழங்குமாறு எமக்கு அறிவித்திருந்தது. இது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.

அத்துடன் அரசாங்கத்துக்கு நெருக்கமான சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவை நியமித்து அரசியலமைப்பொன்றை தயாரிக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு. நியமிக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணிகள் தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. 

என்றாலும் புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதாக இருந்தால், நாட்டில் இருக்கும் அனைத்து இன மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து இன மக்களது மற்றும் கட்சிகளது ஆதரவு தேவை என்றால் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக அமைக்க வேண்டும். ஏனெனில் பாராளுமன்றத்தில் அனைத்து இன மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அனைத்து கட்சிகளும் இருக்கின்றன. அரசாங்கம் அவ்வாறு செயற்படுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்கு சம்பந்தப்படும். 

அத்துடன் அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை கடிதம் ஒன்றின் மூலம் தெளிவாக அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கின்றது.

அனைத்து இன மக்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் ஆதரவில்லாமல் தயாரிக்கப்படும் அரசியலமைப்பினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அரசியலமைப்பு தொடர்பாகவும் விமர்சனங்கள் வருவதற்கு காரணமாக இருந்தது, சிறுபான்மை மக்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள தவறியமையாகும். அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment