உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகையால் உதயங்க வீரதுங்கவுக்கு நன்மை இருக்கலாம், ஆனால் நாட்டுக்கு ஆபத்தே அதிகம் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகையால் உதயங்க வீரதுங்கவுக்கு நன்மை இருக்கலாம், ஆனால் நாட்டுக்கு ஆபத்தே அதிகம் - முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கம் இருந்தால் கொவிட் அச்சுறுத்தல் குறைவான, பணம் செலவழிக்கக் கூடிய நாடுகளில் இருந்தே சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்துவர வேண்டும். உக்ரைன் சுற்றுலா பயணிகளால் இந்த இரண்டையும் எதிர்பார்க்க முடியாது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனாவுடன் எமது அன்றாட வேலைத்திட்டங்களை மேற்கொள்வதுடன் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று சுற்றுலாத் துறையையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. சுற்றுலாத்துறை இயங்காமல் இருப்பதால் அதனை நம்பி வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அதனால் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குகின்றோம்.

ஆனால் தற்போது நாட்டுக்கு வந்திருக்கும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் சுற்றுலா துறையை கட்டியெழுப்ப முடியுமா என்பது பேள்விக்குரியாகும்.

இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதன் மூலம் பாரிய சிரமத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஏனெனில் கொவிட் அச்சறுத்தல் அதிகம் இருக்கும் நாடுகளில் உக்ரைனும் ஒன்று. அங்கு இருக்கும் மக்களில் 38 பேரில் ஒருவருக்கு கொவிட் இருப்பதாக அந்த நாடு அறிவித்திருக்கின்றது. அப்படியான நாடொன்றில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவது எமது நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாகும்.

அதேபோன்று சுற்றுலா வரக்கூடியவர்கள் அதிகம் செலவழிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் மூலம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யலாம். ஆனால் உக்ரைன் நாடு, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகும். 

வறுமை நிலையில் இருக்கும் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை கொண்டுவந்திருப்பதன் மூலம் அரசாங்கம் எதனை எதிர்பார்க்கின்றது. இந்த சுற்றுலா பயணிகளின் வருகையால் உதயங்க வீரதுங்கவுக்கு நன்மை இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு ஆபத்தே அதிகம். 

மேலும் உக்ரைன் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வரும்போது அவர்களுக்கு எமது நாட்டின் கொவிட் சட்டம் பின்பற்றப்படுவதில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்துவதில்லை. ஆனால் உக்ரைன் நாட்டுக்கு யார் சென்றாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அந்த நாடு அறிவித்திருக்கின்றது.

எனவே அரசாங்கம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து, அழைத்துக் கொண்டு வந்திருக்கும் உக்ரைன் சுற்றுலா பயணிகளால் நாட்டுக்கு ஆபத்தே அதிகம். மாறாக அதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஹோட்டல்களுக்கான கட்டணமும் மிகவும் குறைவாகும் என்றார்.

No comments:

Post a Comment