(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல, எமது ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூலமாக தாக்குதல் குறித்து பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, ஜனவரி 31 ஆம் திகதியுடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிந்தவுடன் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில் ஆளும் கட்சி எம்.பியான நளின் பெர்னாண்டோ ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணையின் தற்போதைய நிலைமைகள் குறித்து, ஜெனீவா பிரேரணை குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது, இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களுமே பொய்யானது, அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்தவித ஆய்வும் செய்யாது பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கினார்.
உலகில் எந்தவொரு நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சரும் தமது இராணுவம் போர் குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொண்டதும் இல்லை, இவ்வாறான பிரேரணை ஒன்றிற்கு இணை அனுசரணை வழங்கியதும் இல்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் மட்டுமே இது நடந்தது, எவ்வாறு இருப்பினும் இந்த சகல விடயங்களையும் நாம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா கூட்டத் தொடரில் நிராகரித்து பதில் கூறுவோம் என்றார்.
No comments:
Post a Comment