(எம்.மனோசித்ரா)
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தடுப்பூசியையும் எந்தவொரு நாட்டிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்பு இல்லை. எவ்வாறிருப்பினும் பெப்ரவரி மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் கொவிட் தடுப்பூசிகள் நிச்சயம் பெற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை இணைய வழியூடாக நடைபெற்றது. இதன்போது, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிப்படாத தடுப்பூசியை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் கெஹெலிய இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், இது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு லலித் வீரதுங்க தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் அந்த குழுவில் அவதானம் செலுத்தப்படும்.
இதன்போது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டதும் பெருமளவான உலக நாடுகள் பயன்படுத்துவதுமான தடுப்பூசிகளின் பிரதிபலன் குறித்து ஆராய்ந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும். எனவே ஏற்றுக் கொண்டது, ஏற்றுக் கொள்ளப்படாதது என்று தெரிவித்து அரசாங்கத்திற்குள் குழப்பங்களை ஏற்படும் எதிர்பார்ப்பு இல்லை.
கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது தொடர்பான மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளன. அதற்கமைய பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதற்பகுதியில் அதனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதுவரையில் தடுப்பூசிகளை தயாரித்துள்ள 4 நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும்போது நாம் முகங்கொடுக்க நேரிடும் இரு பிரதான சவால்கள் உள்ளன. அதாவது எமது நாட்டுக்கு பொறுத்தமான தடுப்பூசி எது ? மற்றும் அவற்றைப் பெற்றுக் கொண்ட பின்னர் எவ்வாறு உரிய முறையில் பேணுவது என்பதாகும். இவை தொடர்பிலும் ஆராய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கப்படும்.
கேள்வி : இலங்கையின் சனத் தொகையில் 20 சதவீதமானோருக்கு மாத்திரமே இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அவ்வாறெனில் அரசாங்கம் இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாகவா அல்லது பணத்தை பெற்றுக் கொண்டா வழங்கும் ?
பதில் : இது தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் மக்களுக்கு இதனை இலவசமாக வழங்கவே எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு 50 வீதமானோருக்கு இதனை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம். 11 மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு இதனை யாருக்கு முதலில் வழங்குவது என்ற ஒழுங்குபடுத்தலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் இறுதி தீர்மானத்தை மக்களுக்கு அறிவிக்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment