விஞ்ஞான ரீதியான தடுப்பூசிகளைப் பெற வேண்டுமே தவிர, அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 22, 2021

விஞ்ஞான ரீதியான தடுப்பூசிகளைப் பெற வேண்டுமே தவிர, அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் மேல் மாகாணத்தில் மாத்திரம் நிலைகொண்டிருந்த வைரஸ் பரவலை ஏனைய பகுதிகளுக்கு பரவ விடாமல் எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களிலும் அபாய வலயங்கள் பல உருவாகியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. குறைவடைந்துள்ளது என்பதற்காக கவனயீனமாக இருக்காமல் தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

கடந்த டிசம்பரில் நாளொன்றுக்கு தொற்றுக்குள்ளானோர் 3 சதவீதமாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது 5 வீதத்தைக் கடந்துள்ளது. இதன் மூலம் நாம் அபாய கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளோம் என்பது தெளிவாகிறது. 

எனவே இப்போதாவது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் பெப்ரவரி மாதத்தின் முதல் பகுதியில் பாரதூரமான அபாயகட்டத்திற்கு செல்ல நேரிடும்.

சுகாதார தரப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு கொவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இரண்டாம் அலையில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 

இந்த எண்ணிக்கை அதிகரிக்குமானால் எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மருத்து சேவையில் பாரிய நெருக்கடி ஏற்படும். எனவே இவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் பரிந்துரைகளை கையளித்துள்ளது.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் எமது நாட்டுக்கு பொறுத்தமானதுமான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மாறாக பாதுகாப்பற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்து மக்களை அபாயத்திற்குள் தள்ளிவிடக் கூடாது. தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது விஞ்ஞான ரீதியானதும் தொழிநுட்ப ரீதியானதுமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment