மீள ஆரம்பமாகவுள்ள யாழ்ப்பாண புகையிரத சேவைகள் : நாளை முதல் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்..! - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

மீள ஆரம்பமாகவுள்ள யாழ்ப்பாண புகையிரத சேவைகள் : நாளை முதல் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்..!

எதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் நாளை முதல் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரி.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் புறப்பட இருக்கின்றது. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ் தேவி புகையிரதமும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55 க்கும், 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ் தேவி புகையிரதமும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் எதிர்வரும் 18 ஆம் திகதி சேவையை ஆரம்பிக்க இருக்கின்றது.

ஏனைய புகையிரத சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையிரதமும், இரவு தபால் புகையிரதம் உட்பட அனைத்து புகையிரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது.

நாளை 17 ஆம் திகதி தொடக்கம் காலையில் இருந்து உங்களுக்கு தேவையான ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்துகொள்ள முடியும். 

அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரதத்தில் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment