கம்பஹாவில் நிதி நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை : விசாரணைக்கு 5 பொலிஸ் குழுக்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

கம்பஹாவில் நிதி நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை : விசாரணைக்கு 5 பொலிஸ் குழுக்கள் நியமனம்

(செ.தேன்மொழி)

கம்பஹா பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிலையமொன்றின் ஊழியர்களை துப்பாக்கி முனையால் அச்சுறுத்தி அங்கிருந்து சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஒன்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் என்பற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர்களை கைது செய்வதற்காக, ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பஹா - கொழும்பு பிரதான வீதியில் மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிலையமொன்றில் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்களிருவர், துப்பாக்கி முனையால் நிதி நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி அங்கிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்துள்ள சந்தேக நபர்கள், தலைக் கவசம் அணிந்துதிருந்துள்ளதுடன், அவர்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு முகத்தை மறைத்து ஏதோ விபரமொன்றை அறிந்து கொள்வது போன்று நிதிநிலையத்திற்குள் வந்துள்ளதுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையால் அச்சுறுத்தி 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும், மூன்று கோடி 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக ஐந்து குழுக்கள் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிதி நிலையங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் இவ்வாறான கொள்ளையர்கள் தொடர்பில் மேலும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

யாராவது நீண்ட நேரமாக நிதி நிலையங்களுக்கு அருகில் நடமாடினாலும் காரணமின்றி நிதி நிலையங்களுக்குள் வந்தாலும் அவர்கள் அது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். 

நிதி நிலையங்களிலுள்ள சி.சி.ரி.வி கெமராக்களை 24 மணி நேரமும் செயற்பாட்டில் வைத்துக் கொள்வதுடன், பண பரிமாற்ற நடவடிக்கைகளின் போது மேலும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

இதற்கு முன்னரும் இனந்தெரியாத நபர்களால் இவ்வாறு பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால், நிதி நிலையங்கள் அது தொடர்பில் மேலும் அக்கறையுடன் செயற்பட்டால் இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பிருக்காது.

No comments:

Post a Comment