ஊழல் தொடர்பான தரப்படுத்தலில் இலங்கைக்கு 94 ஆவது இடம் - நியூஸிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் முதலிடம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 29, 2021

ஊழல் தொடர்பான தரப்படுத்தலில் இலங்கைக்கு 94 ஆவது இடம் - நியூஸிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் முதலிடம்

(நா.தனுஜா)

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் 2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தொடர்பான தரப்படுத்தல் சுட்டியில் இலங்கை 94 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கடந்த அரசாங்கங்கள் ஊழலை ஒழிப்பதற்கான உறுதிமொழிகளை நிறைவேற்றாமையே இந்தப் பின்னடைவிற்குக் காரணம் என்று அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி நதீஷானி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஊழலுக்கெதிரான உலகளாவிய வலையமைப்பான ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் 'ஊழல் தொடர்பான தரப்படுத்தல் சுட்டி' வெளியிடப்படுவது வழமையாகும்.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தொடர்பான தரப்படுத்தல் சுட்டி நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

மேற்படி தரப்படுத்தல் சுட்டியைத் தயாரிக்கும் போது, ஒவ்வொரு நாடுகளிலும் பதிவாகியுள்ள ஊழல் சம்பவங்களின் அடிப்படையில், அவற்றுக்கு 0 - 100 வரையில் புள்ளிகள் வழங்கப்படும். 

அதன்படி 0 என்ற புள்ளியைப் பெறுகின்ற நாடு ஊழல் உயர்வாக உள்ள நாடாகவும் 100 புள்ளியைப் பெறுகின்ற நாடு ஊழலற்ற தூய்மையான நாடாகவும் நிர்ணயிக்கப்படும்.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தரப்படுத்தல் சுட்டியின் பிரகாரம் இலங்கை 38 புள்ளிகளைப் பெற்று 94 ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை 2019 ஆம் ஆண்டில் 93 ஆவது இடத்திலும் 2018 ஆம் ஆண்டில் 89 ஆவது இடத்திலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கைக்கு அண்மையிலுள்ள நாடுகள் பெற்றுக் கொண்ட புள்ளிகளை நோக்குகையில், இந்தியா 40 புள்ளிகளைப் பெற்று 86 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 31 புள்ளிகளைப் பெற்று 124 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 26 புள்ளிகளைப் பெற்று 146 ஆவது இடத்திலும், பூட்டான் 68 புள்ளிகளைப் பெற்று 24 ஆவது இடத்திலும், நேபாளம் 33 புள்ளிகளைப் பெற்று 117 ஆவது இடத்திலும், மாலைதீவு 43 புள்ளிகளைப் பெற்று 75 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தரப்படுத்தல் சுட்டியில் 88 புள்ளிகளைப் பெற்று நியூஸிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

அதாவது அவை ஊழலற்ற மிகவும் தூய்மையான நாடுகள் என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த அரசாங்கங்கள் ஊழலை ஒழிப்பதற்கான உறுதிமொழிகளை வழங்கியிருந்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே ஊழல் தரப்படுத்தல் சுட்டியில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைந்து வருவதற்கான மிகமுக்கிய காரணமாகும் என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை கிளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி நதீஷானி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment