அரசாங்கம் 49 வீதத்தை நிரந்தரமாக இந்தியாவுக்கு விற்க தீர்மானித்துள்ளது, அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள் - ஹர்ஷன ராஜ கருணா - News View

About Us

About Us

Breaking

Friday, January 15, 2021

அரசாங்கம் 49 வீதத்தை நிரந்தரமாக இந்தியாவுக்கு விற்க தீர்மானித்துள்ளது, அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள் - ஹர்ஷன ராஜ கருணா

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை குத்தகைக்கு வழங்கியிருந்தால் கூட குத்தகைக் காலம் நிறைவடைந்தவுடன் அதனை மீண்டும் எமக்கு உரித்துடையதாகக்கிக் கொள்ளளலாம். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 49 வீதத்தை நிரந்தரமாக இந்தியாவுக்கு விற்க தீர்மானித்துள்ளது. அவ்வாறு நடந்தால் அதனை மீண்டும் எம்மால் உரிமை கோர முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜ கருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கிழக்கு முனையத்தை முழுமையாக விற்காவிட்டாலும் தற்போது வழங்கப்படும் 49 வீதம் மீண்டும் எமக்கு உரித்துடையதாகாது. குத்தகைக்கு வழங்கினால்கூட அதற்கான காலம் நிறைவடைந்தவுடன் மீண்டும் எம்மால் அதனை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கிழக்கு முனையத்தின் 49 வீதத்தை நிரந்தரமாகவே இந்தியாவிற்கு விற்க தீர்மானித்துள்ளார். 

இந்த அரசாங்கம் எதனைக்கூறி ஆட்சியை கைப்பற்றியது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் வாக்குறுதி வழங்கியவர்கள் சில மாதங்களிலேயே அவற்றை மறந்து செயற்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து விட்டு மக்களை ஏமாற்றுவதற்காக அந்த பழியை கடந்த அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம். 

இவ்வாறிருக்கையில் எமது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போது இவர்கள் திறந்து வைத்து அதன் பெயரை இவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு எமது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஹொரணை டயர் தொழிற்சாலையையே ஜனாதிபதியும் பிரதமரும் திறந்து வைத்துள்ளனர்.

நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினொருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான பிள்ளையான் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் தொடர்ச்சியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது நீதித்துறை சுயாதீனத்தன்மை பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் சீராக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும் இதுவரையில் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. குறைந்தது 20 மில்லியன் தடுப்பூசிகளையாவது பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள முப்படையினர், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஏனைய மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்காவது முதற்கட்டமாக தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு விமான நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுமாக இருந்தாலும் சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிப்பதிலும் சிக்கல் இருக்காது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் 69 இலட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அவ்வாறே இருக்க ஏனைய பதவிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தலைமைத்துவ மாற்றத்தையே அனைவரும் எதிர்பார்த்தனர். எவ்வாறிருப்பினும் நாம் தற்போது அந்த கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் இல்லை என்பதால் புதிதாக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்துக்களை மாத்திரமே எம்மால் கூற முடியும் என்றார்.

No comments:

Post a Comment