தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள், 2 வாரங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசு மனித வள மேம்பாட்டு மத்திய ஆணையம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு மனித வள மேம்பாட்டு மத்திய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது அமீரகத்தின் அனைத்து அரசு சுகாதார மையங்களில் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
எனினும் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் இல்லை என்பதால், பொதுமக்கள் மற்றும் மக்கள் சேவைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஒரு சிலர் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை.
இதனால் மக்கள் சேவைகளில் பணியாற்றும் அவர்கள் மூலம் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சுகாதார பாதுகாப்பு கருதி அனைத்து வழிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அரசு அலுவலகங்களில் முழு நேரமாக பணியாற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அனைத்து ஊழியர்களும், 2 வாரங்களுக்கு ஒருமுறை அதாவது 14 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் பி.சி.ஆர். சோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
ஆலோசனை மற்றும் நிபுணர் சேவைகளில் பணியாற்றுவோர் மற்ற அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது குறைந்தது 3 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான கொரோனா பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும்.
கொரோனா பரிசோதனைகளுக்காக ஆகும் செலவீனங்களை அந்தந்த அரசுத்துறை ஊழியர்களே ஏற்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான இந்த கட்டாய கொரோனா பரிசோதனை முறையானது, வரும் 17ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment