சுற்றுலாப் பயணிகளுக்காக 21ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படும், சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றியே நடவடிக்கைகள் முன்னெடுப்பு என்கிறார் அமைச்சர் பிரசன்ன - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

சுற்றுலாப் பயணிகளுக்காக 21ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படும், சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றியே நடவடிக்கைகள் முன்னெடுப்பு என்கிறார் அமைச்சர் பிரசன்ன

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 21ஆம் திகதி உல்லாசப் பயணிகளுக்காக விமான நிலையத்தை முற்றாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளிடம் இருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் 30 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப இது பெரும் உறுதுணையாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சில் அது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஊடகத்துறை நிறுவனங்களின் பிரதானிகளும் பங்கேற்றுள்ளனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலையங்களை திறக்கும் பரீட்சார்த்த நடவடிக்கை கடந்த டிசம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைனில் இருந்து 1500 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தனர். அதன் மூலம் நாட்டுக்கு 420 மில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.

நாட்டுக்கு வரும் உல்லாச பயணிகள் 72 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையை சமர்ப்பிப்பது அவசியம். அதனூடாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என காணப்பட்டால் மாத்திரமே அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர். 

அவர்கள் நாட்டுக்கு வருகை தந்ததும் ஹோட்டல்களில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக பிசிஆர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படும். அதன் பின்னரும் 5-7 நாட்களுக்குள் அவர்கள் மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன் பின்னரே அவர்கள் சுற்றுலா தொகுதிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டு அங்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும்.

அவர்கள் சாதாரண சமூகத்துடன் தொடர்புகளைப் பேண எந்த சந்தர்ப்பமும் கிடையாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment