127 பேருக்கு கொரோனா - 2 நகரங்களுக்கு சீல் வைத்தது சீன அரசு - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

127 பேருக்கு கொரோனா - 2 நகரங்களுக்கு சீல் வைத்தது சீன அரசு

127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஹூபேய் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களுக்கு சீன அரசு சீல் வைத்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரசால் இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், தொடக்கத்தில் வைரஸ் வேகமாக பரவியபோதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி தங்கள் நாட்டில் வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. 

ஆனால், தற்போதும் மிகச்சிறிய எண்ணிக்கையில் அந்நாட்டில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் வைரஸ் பரவும் நகரங்களை சீல் வைத்து மக்கள் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு செல்வதை சீன அரசு தடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஹூபேய் மாகாணத்தில் மீண்டும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஷீஜிங்ஹங் மற்றும் ஜிங்டைய் ஆகிய இரண்டு நகரங்களில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. 

இந்த இரண்டு நகரங்களையும் சேர்த்து மொத்த மக்கள் தொகை 1 கோடியே 80 லட்சம் பேர் ஆகும். இதற்கிடையில், இந்த இரண்டு நகரங்களில் மொத்தம் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், வைரஸ் மற்ற நகரங்களுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த இரண்டு நகரங்களும் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. 

இந்த நகரங்களில் இருந்து வெளிநகரங்களுக்கான போக்கு வரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 1 கோடியே 80 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்த 2 நகரங்களின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு நகரங்களில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது. 1 கோடியே 80 லட்சம் பேரில் இதுவரை 67 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad