எமது ஆட்சி வந்தவுடன் பல நாடகங்கள் அரங்கேறியது. அதில் முக்கியமான ஒன்று சுவிஸ் நாடகமாகும் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

எமது ஆட்சி வந்தவுடன் பல நாடகங்கள் அரங்கேறியது. அதில் முக்கியமான ஒன்று சுவிஸ் நாடகமாகும் - விமல் வீரவன்ச

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பாதுகாப்பு திருப்தியடையக்கூடிய நிலையிலேயே உள்ளது. இனவாத, மதவாத கொள்கையில் இந்த நாட்டில் அநீதிகளை நடத்த நாம் அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் இருக்காது என்பதை சர்வதேசத்திற்கு கொண்டு சேர்க்கவே சுவிஸ் தூதரக நாடகம் அரங்கேற்றப்பட்டது எனவும் அவர் கூறினார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க 69 இலட்சம் மக்கள் வாக்களித்தமையானது இந்த நாட்டினை பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்துவார் என்ற எண்ணத்திலேயே. இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு திருப்தியடையக்கூடிய நிலையிலேயே உள்ளது.

இப்போது சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள கலவரமும் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாகும். அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சி என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையிலும் இவ்வாறான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது புலனாய்வுத்துறை அதனை கண்டறிந்து கலவரம் நடக்கவிருந்ததை தடுத்தனர்.

சிறைக்குள் உள்ளவர்களே ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். அதற்கு மனநோய்க்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்திக் கொண்டமையே காரணமாகும்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். இனவாத, மதவாத கொள்கையில் இந்த நாட்டில் அநீதிகளை நடந்த நாம் அனுமதிக்க மாட்டோம்.

எமது ஆட்சி வந்தவுடன் பல நாடகங்கள் அரங்கேறியது. அதில் முக்கியமான ஒன்று சுவிஸ் நாடகமாகும். அதில் சம்பந்தப்பட்ட பெண் ஐக்கிய தேசிய கட்சியின் யார் என்பது எமக்கு தெரியும். ஷானி, நிஷாந்த சில்வா அனைவரும் இந்த நாடகத்தில் பங்காளர்கள். இந்த நாடகங்கள் எல்லாமே எமக்கு தெரியும்.

ஆனால் நாம் இன்று எந்த நாடகத்தையும் அரங்கேற்ற விடமாட்டோம். கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனநாயகம் இருக்காது. மனித உரிமைகள் அழிக்கப்படும் என சர்வதேசத்திற்கு காண்பிக்கவே இந்த நாடகங்கள் அரங்கேறியது.

அதேபோல் இந்த நாட்டில் எந்த பயங்கரவாத குழுவையும் தலைதூக்க இடமளிக்க மாட்டோம். கடந்த கால விளையாட்டுக்களை இப்போதும் விளையாட முடியாது என விமல் வீரவன்ச கூறினார்.

No comments:

Post a Comment