(நா.தனுஜா)
மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் உளநல மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து ஒன்றைத் தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் அடிப்படைகளற்றவை என இலங்கை உளநல மருத்துவ கல்லூரி சுட்டிக்காட்டியுள்ளது.
வன்முறை தூண்டப்படுவதற்கும் மிக மோசமான நடத்தைக்கும் குறித்த மருந்து காரணமாக அமையாது என்றும் இலங்கை உளநல மருத்துவ கல்லூரி தெரிவித்திருக்கிறது.
இது குறித்து இலங்கை உளநல மருத்துவ கல்லூரியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் உளநல மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்படும் மருந்து ஒன்றைத் தொடர்புபடுத்தி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.
இவை துரதிஷ்டவசமாக எவ்வித அடிப்படைகளுமின்றி வெளியிடப்பட்ட செய்திகள் என்பதுடன் உண்மையில் பயனடையும் நோக்கில் இந்த மருந்தைப் பயன்படுத்தும் பல்லாயிரம் பேருக்கு இச்செய்திகளால் ஏற்பட்டிருக்கக்கூடிய சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது.
இலங்கையில் உளநல மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் குறித்த மருந்து, உலகளாவிய ரீதியில் பலராலும் உபயோகிக்கப்படுகின்றது என்பதுடன் அது உரிய அதிகாரிகளின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது.
எமது நாட்டில் கடந்த ஏழு தசாப்தகாலமாக உளநல மருத்துவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தி வருவதுடன் அது நோயாளர்களுக்குப் பெரிதும் பயனளித்திருக்கிறது.
அதுமாத்திரமன்றி உரிய தராதரங்களுக்கு அமைவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின் பிரகாரமே மருத்துவர்கள் இம்மருந்தைப் பரிந்துரை செய்கின்றனர்.
எனவே வன்முறை தூண்டப்படுவதற்கும் மிகமோசமான நடத்தைக்கும் குறித்த மருந்து காரணமாக அமையாது என்பதுடன் அது அமைதியையே ஊக்குவிக்கும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment