வடக்கு அபிவிருத்தி குறித்து வரவு செலவு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அரசியல் கைதிகள் குறித்து நாளை நீதியமைச்சருடன் பேச்சுவார்த்தை என்கிறார் அங்கஜன் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

வடக்கு அபிவிருத்தி குறித்து வரவு செலவு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அரசியல் கைதிகள் குறித்து நாளை நீதியமைச்சருடன் பேச்சுவார்த்தை என்கிறார் அங்கஜன்

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விசேட பொறிமுறையை உருவாக்குதல் குறித்து நீதியமைச்சருடன் நாளை சனிக்கிழமை பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து 2021 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள கிராமிய உற்பத்திகளை கட்டியெழுப்பினால் நடுத்தர மக்கள் பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைவார்கள். 

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நெடுகாலமாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள உறவுகளின் உணர்வுகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு புரிந்துள்ளோம். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கம் அரசியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையான முறையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும். 

அரசியல் கைதிகள் என்ற நிலைக்குள் பல தரப்பினர் உள்ளடங்குகிறார்கள். இவர்களின் விடுதலை குறித்து விசேட பொறிமுறை வகுக்கப்பட்ட வேண்டும். இவ்விடயம் குறித்து ஆளும் தரப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை நீதியமைச்சரை சந்திக்கவுள்ளோம்.

ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவது ஜனாதிபதியின் பிரதான இலக்கு. நீதித்துறையின் கட்டமைப்புக்குள் அரசியல் தலையீடு தாக்கம் செலுத்த தற்போது வாய்ப்பில்லை என்றார்.

No comments:

Post a Comment