இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு ஆலோசனை..! - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு ஆலோசனை..!

(க.பிரசன்னா)

சுயாதீன ஆணைக்குழுவான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினை மூடி அதன் ஊழியர்களை மின் சக்தி அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் குறித்த கடிதமானது உத்தியோகபூர்வமாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறவில்லையென நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கே முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தடைப்பட்டுள்ள மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான திறமையான பணிச்சூழலை உருவாக்குவதற்கான மாற்றங்கள் குறித்தே முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவின் பிரகாரம் குறித்த கடிதம் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலுள்ள ஊழியர்களை, அவர்களின் தகைமைக்கு ஏற்ற வகையில், தேசிய திட்டமிடல் திணைக்களம் அல்லது மின் சக்தி அமைச்சு ஆகியவற்றுக்குள் உள்வாங்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலம் திறைசேரிக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை, நுகர்வோர் அதிகார சபை அல்லது மின்சார சபையின் ஊடாக பிரதியீடு செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நேரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மூடப்படக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையோடு தொடர்புபட்ட, தனியார் மின் உற்பத்தியாளர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கூடாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு முனைகின்றார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

பாரிய ஊழலொன்றுக்காகவே கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் கதவு திறக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment