நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் மாணவர்களுக்கு முறையான இணையவழிக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது. இணையவழிக் கல்வியை முறைப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு கல்வியமைச்சருக்கு இருக்கிறது என 'சிவில் அபி' என்ற அமைப்பின் தலைவர் கபில ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கிறார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது எமது நாட்டின் சிறுவர்களை எதிர்காலத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தயார்ப்படுத்தும் நோக்கிலேயே சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவினால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இலவசக் கல்வியின் ஊடாகப் பயன் பெற்ற ஒருவர்தான் தற்போது நாட்டின் கல்வியமைச்சராக இருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னரும் இவ்வருடம் கொரோனா வைரஸ் பரவலின் பின்னரும் நாட்டின் மாணவர்களுக்கான இலவசக் கல்வி உரிமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று வழியே இணையவழிக் கல்வி ஆகும்.
இணையவழிக் கல்வி என்பது எமது நாட்டிற்குப் புதிதல்ல. ஆனால் அக்கல்வி முறையை அறிமுகப்படுத்தும் போது, அதற்கான அனைத்து உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுவதை கல்வியமைச்சு உறுதி செய்யவில்லை.
தற்போது அந்தப் பொறுப்பு பெற்றோர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. இணையவழிக் கல்வியை அறிமுகம் செய்யும்போது அதற்கு அவசியமான ஸமாட் கையடக்கத் தொலைபேசி, டெப், மடிக்கணினி, இணைய வசதி போன்றவற்றைக் குறைந்த செலவில் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆகவே மாணவர்களுக்கு முறையான இணையவழிக் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது. இலவசக் கல்வியின் ஊடாக இப்போது கல்வியமைச்சராக மாறியிருக்கும் ஜீ.எல்.பீரிஸ் இணையவழிக் கல்வியை முறைப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்.
எனவே கல்வித்துறையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி, குறைபாடுகளற்ற இணையவழிக் கல்வி முறையொன்றை அறிமுகம் செய்வதற்குக் கல்வியமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment