மாகாண சபை முறைமை தொடர்பில் தன்னிச்சையாக எடுக்கப்படக் கூடிய தீர்மானம் அல்ல என்கிறார் தயாசிறி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

மாகாண சபை முறைமை தொடர்பில் தன்னிச்சையாக எடுக்கப்படக் கூடிய தீர்மானம் அல்ல என்கிறார் தயாசிறி

(எம்.மனோசித்ரா)

மாகாண சபை முறைமையை தொடர்ந்தும் செயற்படுத்துவதா இல்லையா என்பது எம்மால் தன்னிச்சையாக எடுக்கப்படக் கூடிய தீர்மானம் அல்ல. இவ்விடயம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாக தீர்மானிக்கப்பட வேண்டியதொன்றாகும். அவ்வாறில்லை என்றால் சர்வதேச மட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மீண்டும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இதனைக் கூறினார்.

கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் மாகாண சபைகளை மீண்டும் மேலும் வலுப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் எவ்வாறு துரிதமாக மாகாண சபைகளை வலுப்படுத்துவது என்பது குறித்து மீண்டும் ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதில் ஆராயப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பௌத்த மதத் தலைவர் தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியமை குறித்து தயாசிறி ஜயசேகர கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானதாகும். மாகாண சபை முறைமையை தொடர்ந்தும் செயற்படுத்துவதா இல்லையா என்பது எம்மால் தனித்து எடுக்கப்படக் கூடிய தீர்மானமல்ல. காரணம் இது இந்தியாவுடன் கலந்துரையாடப்பட வேண்டிய விடயமாகும். அவ்வாறில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் சர்வதே மட்டத்தில் மீண்டும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.

அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திர கட்சியின் அதிருப்தி நிலைமை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதா என்று வினவியதற்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சித் தலைவர் சகலரதும் முன்னிலையில் நாம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தினோம். அதற்கமைய எதிர்வரும் வாரங்களில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment