அரசாங்கத்தினது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மாத்திரமே ஆளுந்தரப்பு வெற்றி கண்டுள்ளது - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

அரசாங்கத்தினது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மாத்திரமே ஆளுந்தரப்பு வெற்றி கண்டுள்ளது - மனுஷ நாணயக்கார

(எம்.மனோசித்ரா)

பிள்ளையான், சில் துணி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வதில் மாத்திரமே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைந்துள்ளார். இவ்வாறு பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்காக 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்தாலும் வெற்றியடைந்துள்ளதைப் போலவே காண்பித்துக் கொள்வார்கள். இவர்கள் தோல்வியடைந்தாலும் நாடு தோல்வியடைய நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. 

பிள்ளையான் மற்றும் சில் துணி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர பசில் ராஜபக்ஷவின் பயணத் தடை நீக்கம் மற்றும் அரச தரப்பிலுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டமை என அரசாங்கத்தினது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மாத்திரமே ஆளுந்தரப்பு வெற்றி கண்டுள்ளது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டை தோல்வியடைச் செய்ய நாம் தயாரில்லை. 

இவ்வாறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்கா 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்? தற்போது பல அரச அதிகாரிகள் தானாக பதவி விலகியுள்ளனர். அந்த வெற்றிடங்களுக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் கொவிட் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உண்மையான மருந்து நாட்டிலேயே கண்டு பிடிக்கப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ஆனால் போலியான மருந்துகளால் மக்களால் ஏமாற்ற வேண்டாம். இவ்வாறான தவறுகளை மக்களுக்கு காண்பிக்கும் ஊடகங்களும் நாடு அபாயத்திற்குச் செல்லும் போது பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment