உண்மையை மூடி மறைக்க அரசாங்கம் சொன்ன பொய்கள் விசாரணை அறிக்கைகளில் அம்பலமாகியுள்ளது - விஜித ஹேராத் - News View

Breaking

Post Top Ad

Thursday, December 24, 2020

உண்மையை மூடி மறைக்க அரசாங்கம் சொன்ன பொய்கள் விசாரணை அறிக்கைகளில் அம்பலமாகியுள்ளது - விஜித ஹேராத்

(எம்.மனோசித்ரா)

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் 11 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். உண்மையை மூடி மறைக்க அரசாங்கம் சொன்ன பொய்கள் விசாரணை அறிக்கைகளில் அம்பலமாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேராத் தெரிவித்தார்.

ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .

மேலும் குறிப்பிடுகையில், மஹர சிறைச்சாலையில் 11 சிறைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வத்தளை நிதிவான் நீதிமன்றத்தில் அது சம்பந்தமான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. 

நேற்றளவில் மேலும் நான்கு பேரின் மரணத்திற்கான காரணம் துப்பாக்கியால் சுடப்பட்டமையே என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னரும் 04 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. 11 பேரில் 08 பேர் சுடப்பட்டதாலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைகள் அமைச்சர் இந்த நிலைமையை மூடிமறைக்க துப்பாக்கிச் சூட்டினால் எவருமே இறக்கவில்லை எனக் கூறினார். ஆனால் விசாரணைக் குழு அறிக்கைகளில் துப்பாக்கிச் சூட்டினால் சிறைக் கைதிகளின் மரணங்கள் சம்பவித்தமை உறுதியாகின்றது. அமைச்சர்களின் பொய் அம்பலமாகியது. 

நீதிமன்றத்தின் பிணையில் செல்ல விடுதலை செய்யப்படவிருந்த பெரும்பாலானேர் சிறைச்சாலையில் இருந்தார்கள். பிணை கிடைத்திருந்தவர்களை வெளியே போடுமாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறைக் கைதிகளின் முதலாவது கோரிக்கையாக அமைந்திருந்தது. இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், மூன்றாவது வேறு முகாம்களில் இருந்து கொரோனாவால் பீடிக்கப்பட்டவர்களை கொண்டவர வேண்டாமென்பதேயாகும். மற்றது உணவு வழங்குவதை முறைப்படி மேற்கொள்ள வேண்டுமென்பதாகும். அப்படி கேட்டவர்களுக்குத்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad